அரசியல்வாதி வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவரா?… நியூசிலாந்து சிற்சபேசன்

சமூகத்திலேயுள்ள பிரச்சினைகளுக்கெல்லாம் அரசியல்வாதியே காரணம் என்னும் கருத்து பரவலாக வியாபித்துவிட்டது.
அப்படியாயின், அரசியல்வாதி என்பது யார்? என்னும் கேள்வி எழுகின்றது.
சமூகத்தைப் பேணிப் – பாதுகாத்து – முன்னகர்த்துபவரே அரசியல்வாதி என்று சொல்லப்படுகின்றது.
கட்சித் தொண்டர்கள், கட்சித் தலைவர்கள், செல்வாக்காளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலதரப்பட்டவர்களுக்கும்கூட அரசியல்வாதி என்ற அடையாளம் பொருந்துகின்றது.
“வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும்,நெல்லுயரக் குடியுயரும், குடியுயரக் கோலுயரும்” என்கிறார் ஔவையார்.
வயலின் வரப்புகள் உயர்த்தப்பட்டால், அங்கு அதிக நீர் சேமிக்கப்படும். நீர்மட்டம் அதிகரிக்கும்போது, நெற்பயிர்கள் செழித்து வளரும். விளைச்சல் பெருகும். மக்கள் செழிப்படைவார்கள். மக்கள் செழிக்கும்போது, நாட்டின் ஆட்சியும் மேன்மையடையும் என்பதே ஔவையார் பாடலின் பொருளாகும்.
அதிலே, ஆட்சி மேன்மையடைய ஆரோக்கியமான அரசியல்வாதியே அச்சாரம் என்பது மறைபொருளாகும்.
அறம் சார்ந்த வழிமுறையே வாழ்வை அழகாக்குகின்றது. மேன்மையடையச் செய்கின்றது. அத்தகையதொரு சூழலிலேயே நல்ல மனிதர்கள் உருவாகின்றனர். நல்ல மனிதர்கள் சேர்ந்து நல்ல குடும்பங்கள் உருவாகின்றன. நல்ல குடும்பங்கள் சேர்ந்து நல்ல ஊர்கள் உருவாகின்றன. நல்ல ஊர்கள் சேர்ந்து நல்ல தேசம் உருவாகின்றது.

ஆக, ஆரோக்கியமான அரசியல்வாதியை உருவாக்கக்கூடிய வல்லமை ஆரோக்கியமான சமூகத்திடமே உள்ளதாகும்.
ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பே அரசியல்வாதியாகும். சமூகத்தின் அரசியல் கொள்ளளவு, அந்தச் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல்வாதியிடமும் பிரதிபலிக்கின்றது.
மக்களால் தெரிவுசெய்யப்படுபவர் மட்டுமே அரசியல்வாதி என்று சொல்லிவிடமுடியாது. அஃது மிகக்குறுகிய வரையறையாகும். தேர்தலொன்றிலே மக்களால் நிராகரிக்கப்படுவோரும் அரசியல்வாதி என்னும் வரையறையூடாகவே கவனிக்கப்பட வேண்டியவராகும்.
அப்படியாயின், மக்களால் நிராகரிக்கப்பட்டதொருவர் அரசியல்வாதியாக வலம்வரலாமா என்னும் கேள்வி எழுகின்றது. அப்படியானதொரு சூழ்நிலையில், மக்கள் கையாலாகாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனரே என்றும் சொல்லலாம்.
ஆம், அதுவே யதார்த்தமாகும்.
அத்தகையதொரு சூழ்நிலையைக் “கையாளக்கூடிய” வல்லமையை சமூகமே வளர்த்துக்கொள்ளவேண்டும்.
“பயனில்சொல் பாராட்டுவோரைக்” கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றலை சமூகம் கொண்டிருக்கவேண்டும்.
இல்லையெனில், “தடியெடுத்தவன் தண்டல்காரன்” என்னும் நிலை தவிர்க்க முடியாததாகும்.
தமிழ் சமூகம், சுயபரிசோதனை செய்துகொள்வதில்லை. வெளிப்படையான உரையாடலை ஊக்குவிப்பதில்லை. மாற்றுக்கருத்தை முளையிலே கிள்ளும் மனநிலையை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. கேள்விகள் எழுப்புவது எதிர்ப்பு மனநிலையாகக் கட்டமைக்கப்படுகின்றது. சிந்தனை துருவமயப்பட்டிருக்கின்றது. அதுவே, “தியாகி – துரோகி” அடையாளப்படுத்தலாக வெளிப்படுகின்றது.
தனிப்பட்டநலன்களை வெற்றிகொள்வதிலேயே ஆற்றல்வளம் மிதமிஞ்சிக் குவிக்கப்படுகின்றது. அதனால், கூட்டுநலன்கள் கவனத்தைப் பெறுவதில்லை. கூடவே, “விரலுக்கு மிஞ்சிய” தன்முனைப்புக் கொண்ட தனிநபர்களையே காணமுடிகின்றது. அதனுடைய நீட்சியாக, தன்முனைப்புக் கொண்ட சமூகமே தலையெடுக்கின்றது.
இத்தகைய குணாம்சங்களைத் தாயகத்தில் மட்டுமல்ல, புலம்பெயர்ந்த தேசங்களிலும் தாராளமாகவே காணலாம்.
மேற்கத்தைய சூழலிலே வாழ்ந்தாலும், தமிழ்சமூகத்தின் “எதிர்மறையான“ குணாம்சங்களைப் புலம்பெயர்ந்தோரும் “பக்குவமாக” வைத்திருக்கின்றனர்.

அங்கேயும், துருவமயப்பட்ட சூழலே காணப்படுகின்றது. ஆரோக்கியமான உரையாடல்களைக் காணமுடிவதில்லை. வெளிப்படைத்தன்மை கிடையாது. சகிப்புத்தன்மை அரிதாகிவிட்டது. மாற்றுக்கருத்தை அழித்தொழிக்கும் மனநிலையைக் “கூச்சமின்றி” வெளிப்படுத்துகின்றனர். மாற்றுக் கருத்துக்களைச் சொல்லக்கூடிய பத்திரிகைகளை, ஒட்டுமொத்தமாக அள்ளி, தெருவோரக் குப்பைத் தொட்டிகளில் போடுவதில் ஆரம்பித்து, குழுச்சண்டைகளுக்குப் பரிகாரம்தேடி பெருந்தெருக்களில் “போராடுவது” வரை சந்திசிரிக்கும் “தமிழ் குணாம்சக்” கூறுகளையே கண்ணுக்கெட்டிய தூரம்வரையில் காணமுடிகின்றது.
பழைய மாணவர் அமைப்பு, சமய அமைப்பு, தன்னார்வத்தொண்டு அமைப்பு, சமூக அமைப்பு என எங்கும் – எதிலும் – எப்போதும் சண்டை சச்சரவுகளுக்குப் பஞ்சமில்லை. நீதிமன்றப்படியேறாத அமைப்புகளின் பட்டியலைக் கைவிரலிலேயே எண்ணிவிடலாம் என்பதே களயதார்த்தமாகக் காணப்படுகின்றது.
தனிதனிக் குழுக்களாகி தன்முனைப்புடன் செயற்படுவது, நான்கு பேர் சேர்ந்துகொண்டால் அடுத்தவரைக் “கால்தடம் போட்டு வீழ்த்துவது”, குழந்தைக்கு அம்புலிகாட்டி சோறுதீத்துவது போன்று – ஏதோவொன்றைச்சொல்லி அடுத்தவரைப் “பேய்க்காட்டி” காரியம் சாதிப்பது போன்றவற்றை புலம்பெயர்ந்தோரிடமும் தாராளமாகவே காணமுடிகின்றது.
இத்தகைய “குணாம்சங்களைக்” கொண்டிருக்கின்ற புலம்பெயர்ந்தோரும், தாயக அரசியலில் செல்வாக்குச் செலுத்துபவர்களாகக் காணப்படுகின்றமை குரூரமான யதார்த்தமாகும்.
தாயக மற்றும் புலம்பெயர்ந்த தமிழ்சமூகத்தைப் பார்க்கும்போது, “நமக்கு வாய்ச்சதும் சரியில்லை, பெத்ததும் சரியில்லை” என்னும் சொலவடை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
சமூகத்தின் வழிகாட்டிகளாக மூத்தவர்கள், கல்விமான்கள், சிந்தனையார்கள் போன்றோர் சொல்லப்படுவதுண்டு. அத்தகையோரே, சமூகத்தின் ஏற்றஇறக்கங்களை அவதானிக்கவேண்டும். நல்லவைகளையும், அல்லாதவைகளையும் எடுத்துச் சொல்லவேண்டும். தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருக்க வேண்டும். “சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல்” செயலாற்றவேண்டும்.
அத்தகையதொரு சூழலை தமிழ் சமூகத்திலே காணமுடியவில்லை. பெரும்போக்கான ஓட்டத்துடன் ஓடுவதும், மேலாதிக்கம் பெறுகின்ற கூட்டத்தின் நிலைப்பாடுகளோடு ஒத்தோடுபவர்களாக இருப்பதுவுமே – சமூக வழிகாட்டிகளின் பண்பியல்பாக ஆகியிருக்கின்றது.
இத்தகையவொரு சமூகத்திலிருந்து ஆரோக்கியமான அரசியல்வாதிகளைத் தேடுவது, “பயறு விதைத்துவிட்டு, நெல் விளைச்சலை” எதிர்பார்ப்பது போன்றதேயாகும்.

ஆரோக்கியமான அரசியல்வாதியை உருவாக்குகின்ற பொறுப்பு முற்றும்முழுவதுமாக சமூகத்திடமே உள்ளது.
சமூகத்திலிருந்தே அரசியல்வாதி உருவாகின்றார் அல்லது உருவாக்கப்படுகின்றார்.
“ஆனைக்கு தன்பலம் தெரியாது” என்பதுபோன்று, ஆற்றல் நிறைந்த சமூகம் தன்னுடைய பலத்தை உணர்ந்துகொள்ளத் தவறுகின்றது. அரசியல்வாதியிடம் கூனிக்குறுகுகின்றது. ஆற்றாமையில் தவிக்கின்றது.
அதனாலேயே, எல்லாப் பிரச்சினைகளுக்குமே அரசியல்வாதியை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டுகின்றது.
இந்தநிலை மாறவேண்டுமெனில், சமூகம் தன்னைத்தானே திரும்பிப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
ஏனெனில், அரசியல்வாதி என்பவர் வேற்றுக்கிரகத்திலிருந்து வந்தவரல்ல. சமூகத்தினாலேயே உருவாக்கப்படுகின்றார்.
![]()