கவிதைகள்

பெரிதும் பேணிக் காத்து நிற்போம்!… கவிதை… ஜெயராமசர்மா

பிள்ளைப் பருவம் பெரும் பருவம்
உள்ளம் மலரும் உயர் பருவம்
கள்ளம் கபடம் உள் நுழையா
காப்பது நம் பெருங் கடனாகும்

தங்கச் சுரங்கம் அவர் மனது
தகரச் சுரங்கம் ஆக்கிடா தீர்
மண்ணை விண்ணை தொடும் நிலைக்கு
மாற்றி விடுங்கள் அவர் மனதை

பேதமை தெரியா பெரு மனது
போதனை கேட்டிடும் நல் மனது
சூதும் வாதும் தொட எண்ணா
தூய்மை நிறைந்த பருவம் அது

வெள்ளை நிறத்து உள்ளம் அது
வேற்றுமை தெரியாப் பருவம் அது
சொன்னால் பதியும் நற் பருவம்
சொல்வோம் தினமும் நன் நெறியை

மூன்று வயதில் முதிர் ஞானம்
மூன்று வயதில் இறைக் காட்சி
வாய்ததை நாமும் மனங் கொண்டால்
வளத்தைக் கொடுப்போம் தினம் அவர்க்கு

பக்தி பக்குவம் காட்டி நிற்போம்
படிப்பில் கவனம் ஊட்டி நிற்போம்
பிள்ளைப் பருவம் என்பதை நாம்
பெரிதும் பேணிக் காத்து நிற்போம் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெலபேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button