பலதும் பத்தும்

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை தொடர்பில் யுனெஸ்கோ வெளியிட்டுள்ள தகவல்

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை சுற்றுச்சூழல் அமைப்பான ‘கிரேட் பேரியர் ரீஃப்’ பவளப்பாறை வெளுப்பு போன்ற தொடர் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்டு வரும் போதிலும், அதனை ‘ஆபத்தான நிலையில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களின்’ பட்டியலில் சேர்க்காத யுனெஸ்கோவின் வரைவு முடிவை அவுஸ்திரேலிய அரசாங்கம் வரவேற்றுள்ளது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் வெப்பநிலை உயர்வு காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் இப்பகுதியில் பலமுறை பாரிய பவளப்பாறை வெளுப்பு ஏற்பட்டுள்ளதால், இதனை ஆபத்தான பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று ஐ. நா விஞ்ஞானிகள் முன்பு பரிந்துரைத்திருந்தனர்.

எனினும், யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய மையத்தின் இந்த புதிய முடிவு, அவுஸ்திரேலியா இந்த முக்கிய சின்னத்தைப் பாதுகாப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளை அங்கீகரிப்பதாக அவுஸ்திரேலியாவின் சுற்றுலாத்துறை உதவி அமைச்சர் நிதா கிரீன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணக் கடற்கரையில் சுமார் 2,400 கிலோமீட்டர் தூரத்திற்குப் பரந்து விரிந்துள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப், 400 வகையான பவளப்பாறைகள் மற்றும் 1,500 வகையான மீன் இனங்களுக்கு வாழ்விடமாகத் திகழ்கின்றது.

ஆண்டுதோறும் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்தத் தளம், அவுஸ்திரேலியப் பொருளாதாரத்திற்கு ஆண்டுக்கு 6.25 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் (சுமார் 9 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள்) அதிகமாகப் பங்களிக்கிறது.

இதனால், இந்தப் பகுதி ‘ஆபத்தான நிலையில் உள்ள சின்னங்கள்’ பட்டியலில் சேர்க்கப்பட்டால் அது தங்களது நாட்டின் சுற்றுலாத்துறையைப் பெரிதும் பாதிக்கும் என்பதால், இதனைத் தவிர்க்க அவுஸ்திரேலிய அரசு பல ஆண்டுகளாகத் தீவிரமாக வலியுறுத்தி வந்தது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வெப்ப அழுத்தத்தின் காரணமாகப் பவளப்பாறைகள் வெண்மையாக மாறும் ‘பவளப்பாறை வெளுப்பு’ நிகழ்வை இப்பகுதி ஐந்து கோடைக்காலங்களில் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button