இலங்கை

வளமான நாடு எனக் கூறி நீதிமன்ற சுயாதீனத்தை அழிக்கின்றது அநுர அரசு – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் விசனம்

வளமான நாடும் அழகான வாழ்க்கையும் அமைத்துத் தருவோம் எனக் கூறி அதிகாரத்துக்கு வந்த ‘திசைகாட்டி’ (தேசிய மக்கள் சக்தி) அரசு, இன்று நீதிமன்றத்தின் சுயாதீனத்தை அழித்துக் கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான பொதுமக்கள் கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பது

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களான சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை ஆகியவற்றுடன் சுதந்திர ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாடுகளின் ஊடாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.

தற்போது அரசு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 63 லிருந்து 65 ஆகவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 லிருந்து 67 ஆகவும் அதிகரிக்க முயற்சித்து வருகின்றது.

எனினும், இந்த இரு உயர் நீதிமன்றங்களிலும் தலா 8 நீதியரசர்கள் நியமிக்கப்படாமல் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான திடீர் அரசமைப்புத் திருத்தங்கள் ஜனநாயக முறைமைக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் கொடுக்கப்படும் மரண அடியாகும்.

இதன் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கு சவால் விடுக்கப்படுவதுடன், அதன் நம்பகத்தன்மை குறித்தும் பல சந்தேகங்கள் எழுகின்றன.

வளமான நாடு எனக் கூறி நீதிமன்ற சுயாதீனத்தை அழிக்கின்றது அநுர அரசு - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் விசனம் | Anura Govt Destroying Judicial Independence

20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 12 லிருந்து 20 ஆகவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 11 லிருந்து 17 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேவைப்பாடுகள் நிலவினால் நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஏனெனில், அது நீதிமன்றத்துக்கான வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதாக அமையும்.

ஆனால், இவ்வாறான தன்னிச்சையான முறையில் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது நீதிமன்றத்தின் நற்பெயரையும் அதன் பிம்பத்தையும் கெடுக்கும் செயலாகும்.

கொழும்பு சட்ட சங்கம், சட்டத்தரணிகள் சங்கம், கொழும்பு மேன் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள், இந்த வயதெல்லை அதிகரிப்பால் ஏற்படும் பாதகமான நிலைமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளன.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற மக்கள் ஆணையை மீறி சர்வாதிகாரப் போக்கை நோக்கிச் செல்ல வேண்டாம் என நான் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

எமது நாட்டுக்குத் தேவை ஜனநாயகமே அன்றி சர்வாதிகாரம் அல்ல. எனவே, இனம், மதம், சாதி, வர்க்க, கட்சி பேதங்கள் இன்றி, ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், நீதிமன்றத்தின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தவும் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே முன்னிற்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button