இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் வாய் திறக்கக் கூடாது!; தடை கோரி திமுக வழக்கு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து, தமிழக முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பொது வெளியில் பேச தடை விதிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில், தி.மு.க., சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரூரில், 2025 செப்டம்பர், 27ல், தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தி உள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி நேற்று தாக்கல் செய்த மனுவில் கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வரும் நிலையில், வழக்கின் தன்மையை மாற்றும் வகையில், தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தொடர்ந்து அவதுாறான கருத்துகளை பேசி வருகிறார். இது, சாட்சிகளை மறைமுகமாக அச்சுறுத்தும் செயல்.

வழக்கு விசாரணையில் இருக்கும் போதே, முதல்வர் விஜய் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதோடு, அரசின் சார்பில் நிதியுதவி மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் செயல் சி.பி.ஐ.,யின் நடுநிலையான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதாகும்.

விசாரணையின் நம்பகத்தன்மையோ அல்லது சாட்சிகளின் வாக்குமூலங்களோ பாதிக்கப்படாத வகையில், நீதிமன்றம் விதித்துள்ள நடைமுறைகளை பின்பற்றி, சி.பி.ஐ.,யிடம் அந்த திட்டத்தை சமர்ப்பித்த பின்னரே, பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு பணி நியமனங்களை வழங்க, மாநில அரசை அனுமதிக்க வேண்டும்.

மேலும், வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத்தின் மாண்பை குலைக்கும் வகையில், தமிழக முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இந்த வழக்கு குறித்து பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டும்.

இதுதொடர்பான தேவையற்ற விவாதங்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்புவதை கட்டுப்படுத்த வேண்டும். என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button