பிரான்ஸின் தேசிய இசை விழாவில் மதுபானங்களுக்குத் தடை

பிரான்ஸில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை (Heatwave) காரணமாக, அங்குள்ள வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத அளவை நெருங்கியுள்ளது. இதன் விளைவாக, ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெறவுள்ள பிரம்மாண்டமான தேசிய இசை விழாவின் சில நிகழ்வுகளில் மதுபானம் அருந்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற ‘ஃபெட் டி லா மியூசிக்’ (Fête de la Musique) இசை விழாக் கொண்டாட்டங்கள், பிரான்ஸ் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களை வீதிகளுக்கு ஈர்க்கும் ஒரு நிகழ்வாகும். எனினும், நாட்டின் மூன்றில் ஒரு பகுதிக்கு மிக ஆபத்தான வெப்ப அலைக்கான ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Alert) விடுக்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதிகளில் உள்ள பொது இடங்களில் மதுபானம் உட்கொள்வதை அரசாங்கம் தடை செய்துள்ளது.
“அரசாங்கத்தாலும் அதன் நிறுவனங்களாலும் ஏற்பாடு செய்யப்படும் அனைத்து நிகழ்வுகளிலும், மதுபானங்களை வழங்க வேண்டாம் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன,” என்று பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவின் (Sébastien Lecornu) அலுவலகம் தெரிவித்துள்ளது.
வரலாற்று உச்சத்தைத் தொடும் வெப்பநிலை
பிரான்ஸின் தென்மேற்குப் பகுதி முதல் பாரிஸ் பிராந்தியம் மற்றும் பர்கண்டி வரை ஞாயிற்றுக்கிழமையன்று வெப்பநிலை 39 முதல் 40 பாகை செல்சியஸ் (102°F – 104°F) வரை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது; சில பகுதிகளில் இது 41 பாகை செல்சியஸை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை வெப்பநிலை அதன் உச்சக்கட்டத்தை எட்டும் என்றும், அது வரலாற்றுப் பதிவுகளைத் தொடக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
“அவசரகால மற்றும் சுகாதாரச் சேவைகளைப் பாதுகாக்கவும், மருத்துவப் பணியாளர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் பராமரிப்பில் கவனம் செலுத்த ஏதுவாகவும் மதுபான நுகர்வைக் கட்டுப்படுத்துமாறு” அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
முடங்கியது போக்குவரத்து; இரவிலும் திறக்கப்படும் பூங்காக்கள்
கடந்த சில நாட்களாக நீடித்து வரும் இந்த வெப்ப அலை நாட்டின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது. இதனால் டஜன் கணக்கான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பாடசாலை வகுப்புகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் முக்கால்வாசிப் பேரைப் பாதித்துள்ள இந்த வெப்ப அலை, இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது ‘நிச்சயமற்றது’ என பிரான்ஸின் வானிலை ஆய்வு மையமான ‘மெட்டியோ-பிரான்ஸ்’ (Météo-France) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பாரிஸ் நகர மக்களும் சுற்றுலாப் பயணிகளும் இந்த வெப்பத்தைத் தாங்குவதற்கு உதவும் வகையில், பிரான்ஸ் தலைநகரில் உள்ள பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் அனைத்தையும் இரவு முழுவதும் திறந்து வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த ‘ஃபெட் டி லா மியூசிக்’ இசை விழா, எப்போதும் கோடைகால அயனநாளில் (Summer Solstice) நடத்தப்படுவது வழக்கமாகும். கடந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற இந் நிகழ்வுகளில் மட்டும் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
![]()