இலங்கை

செம்மணியில் 400 ஐ யும் தாண்டிக் குவிகிறது; ஒரே குழியினுள் 9 எலும்புக் கூடுகள்!; தினமும் 10 முதல் 15 எலும்புக்கூடுகள் வரை கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியில், நாளுக்கு நாள் அதிர்ச்சியூட்டும் பல புதிய ஆதாரங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, ஒரே குழியில் (ஒரே பகுதியில்) சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுடையது என சந்தேகிக்கப்படும் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மிக நெருக்கமாகவும், தாறுமாறான நிலையிலும் குவியலாகக் கண்டறியப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளதுடன் இதுவரை 400 கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நேற்றைய ஒரே நாளில் மட்டும் மொத்தம் 11 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 9 தொகுதிகள் ஒரே இடத்தில் குவியலாகக் கண்டெடுக்கப்பட்டமை அகழ்வாராய்ச்சி அதிகாரிகளையும், மனித உரிமை ஆர்வலர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நிலமட்டத்திற்கு மிக அருகில் இவை தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

தினமும் 10 முதல் 15 எலும்புக்கூடுகள் வரை கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று ஒரே குழியில் (ஒரே பகுதியில்) சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுடையது என சந்தேகிக்கப்படும் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மிக நெருக்கமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

நேற்று தோண்டி எடுக்கப்பட்ட இந்த மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள், நிலமட்டத்திலிருந்து வெறும் ஒன்றரை அடி (1.5 அடி) ஆழத்திற்கும் குறைவான பகுதியிலிருந்தே மீட்கப்பட்டுள்ளன. இவ்வளவு குறைவான ஆழத்தில், மனித உடல்கள் மிக நெருக்கமாகவும் தாறுமாறாகவும் வீசப்பட்டிருப்பது, அவர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு அவசர அவசரமாக அங்கே புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகத்தையும், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நேற்று புதிதாக பதினொரு மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் ஏழு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 30 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்ற நிலையில் குறித்த விடயம் கண்டறியப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் அகழ்வு பணிகள் நடைபெற்றது.

தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.

இதுவரை மொத்தமாக 405 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 377 மனித என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி ஈழப் போர்க் காலத்தில், குறிப்பாக 1990களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த காலகட்டத்தில் (1995-1996), நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டனர்.

1996ஆம் ஆண்டு யாழ். சுண்டிக்குளி பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி இராணுவத்தினரால் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு, செம்மணி விவகாரத்தை உலகறியச் செய்தது. இவ்வழக்கில் தண்டனை பெற்ற இராணுவச் சிப்பாய் ராஜபக்ச, நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் போது, “செம்மணி பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன” என்ற அதிர்ச்சித் தகவலை முதன்முதலில் வெளியிட்டார். அதன் பின்னரே 1999களில் அங்கு முதற்கட்ட அகழ்வுகள் அரைகுறையாக ஆரம்பிக்கப்பட்டன.

தற்போது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் முறையான அகழ்வாராய்ச்சிகளின் மூலம், செம்மணியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 400 ஐத் தாண்டியுள்ளது. இதன் மூலம், மன்னார் மனிதப் புதைகுழி மற்றும் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிகளை விடவும், செம்மணிப் பகுதி இலங்கையின் மிகப்பாரிய மனிதப் புதைகுழியாக உருவெடுத்துள்ளது.

இங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் மிக அதிர்ச்சியூட்டும் விடயம் என்னவெனில், இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டவற்றில் மூன்றில் ஒரு பகுதியினர் (1/3) சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளமைதான்.

பெரியவர்களுடன் சேர்த்து குழந்தைகளும்(குடும்பம் குடும்பமாக)கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதை இது காட்டுகிறது.பலியானவர்களின் உடைகள், காலணிகள் மற்றும் சில தடயப் பொருட்களும் இதன்போது மீட்கப்பட்டு வருகின்றன.

நாளுக்கு நாள் இந்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால், சர்வதேசத் தரம் வாய்ந்த மற்றும் பக்கச்சார்பற்ற ஒரு விசாரணையின் மூலமே, இங்கு புதைக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எப்போது, யாரால் படுகொலை செய்யப்பட்டார்கள்? என்ற உண்மைகளைக் கண்டறிய முடியும் என பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பங்களும், மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button