சலே விடயத்தால் இலங்கையின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைக்கு ஆபத்து

பயங்கரவாத தடைச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது மற்றும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானியான சுரேஷ் சலேவுக்கு எதிராக இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் காரணமாக, இலங்கைக்கு கிடைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதால், அதனை உடனடியாக திருத்துமாறு அல்லது நீக்குமாறு ஐரோப்பிய பொருளாதார சமூகம் நீண்டகாலமாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, நாட்டுக்காக பெரும் சேவையாற்றிய புலனாய்வுப் பிரிவு முன்னாள் பிரதானி சுரேஷ். சலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் சர்வதேச மட்டத்திற்குச் செல்வது நாட்டிற்குப் பாதகமாக அமையும் எனவும், இவ்வாறான விடயங்கள் சர்வதேச ரீதியாக அம்பலமாவது, இலங்கைக்கு கிடைக்கும் சர்வதேச உதவிகளில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப திருத்துவது அல்லது இரத்து செய்வது மற்றும் கைதிகள் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதை நிறுத்துவது ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முதன்மை நிபந்தனையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளின்படி, அந்த சலுகை பெறும் நாட்டில் கடுமையான மனித உரிமை மீறல்கள் ஏற்படும் போது, அவற்றைப் பரிசீலிக்க அவர்களின் விசேட பிரதிநிதிகள் குழு வருகை தந்து விசாரணை நடத்தும்.
இவ்வாறான நிலைமையில் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி ஒருவருக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குள்ளேயே சித்திரவதை நடந்துள்ள நிலையில், இலங்கைக்கு வருகை தரவுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இந்த சம்பவத்தை உன்னிப்பாகக் கவனிப்பார்கள். இதன் மூலம், நாட்டின் ஆடைத்துறை உள்ளிட்ட ஏற்றுமதித் துறைக்கு மிக முக்கியமாக விளங்கும் மில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான வரிச்சலுகையை இலங்கை இழக்கும் அபாயம் தற்போது அதிகமாகவே காணப்படுகின்றது என கூறியுள்ளார்.
![]()