இலங்கை

இந்தியா – இலங்கை கடல் எல்லையில் கண்காணிப்பு தளர்வு ; அபாயம் அதிகரிப்பு

இலங்கைக்கு மிக அருகில் உள்ள தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் காவல்துறை சோதனைச் சாவடிகள் கைவிடப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கிடையிலான கடத்தல் மற்றும் சட்டவிரோத ஊடுருவல் நடவடிக்கைகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த தகவலை இந்திய ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலான கடல் தூரம் சுமார் 38 கிலோமீற்றர் மட்டுமே. இதில் தனுஷ்கோடியில் இருந்து 11 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள 6ஆம் மணல் திட்டையுடன் இந்திய எல்லை நிறைவடைகிறது.

இந்த குறுகிய கடல் எல்லைப் பகுதி வழியாக இருநாட்டு கடத்தல் குழுக்கள் மற்றும் சட்டவிரோதமாக நுழைய முயற்சிப்போர் தடையின்றி செயல்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலோர பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், பாம்பன் பாலம், ராமேஸ்வரம் ஓலைக்குடா, வேர்க்கோடு மற்றும் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

எனினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக போதிய காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்படாத காரணத்தால், இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் பெருமளவில் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனுஷ்கோடியில் காவல்துறையினர் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஓய்வறைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதுடன், அப்பகுதியில் தற்போது ஒரு காவல்துறை அதிகாரி கூட நிரந்தர பணியில் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையால் கடல் வழியாக நடைபெறும் கடத்தல் மற்றும் சட்டவிரோத ஊடுருவல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் உடனடியாக சோதனைச் சாவடிகளுக்கு காவல்துறையினரை நியமித்து கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button