இலங்கை

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த சிறீதரன் எம்.பி!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்  நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச் சந்திப்பின் போது, தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகால அரசியல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, தமிழர்களின் பூர்வீக இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு, அவ்விடங்களில் திட்டமிட்ட முறையில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை மற்றும் செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது தோண்டப்பட்டு வரும் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளிட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டதோடு, தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கான நீதியை நிலைநாட்டுவது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலும் இருதரப்பிற்கும் இடையில் ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இத்தகைய சந்திப்புகளையும் ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்து இதன்போது இணக்கம் காணப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினருக்கு மதிய உணவு உபசரிப்பும் வழங்கப்பட்டது.

இவ் உயர்மட்டச் சந்திப்பில், தமிழ் மக்களின் அரசியல் விவகாரங்களில் 50 ஆண்டுகால நீண்ட அனுபவமிக்க மூத்த தலைவரான கே. எஸ். ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button