இலங்கை

கோதாபய ராஜபக்‌ஷ கைதாகிறாரா?; நீதிமன்றத்திடம் தஞ்சம்; மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவசர மனு 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷ கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகும் நிலையில், தான் அவ்வாறு கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, அவரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷ, தனது சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக நேற்று செவ்வாய்க்கிழமை இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு, மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர் தொடர்பான வழக்கின் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவிற்கும் மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 3ஆம் திகதி வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது.

அன்றைய தினத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் நீதிமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவை அடிப்படையாகக் கொண்டே குறிப்பிட்ட மூவருக்கும் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.

இதற்கமைய கோதாபய ராஜபக்‌ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், இதற்காக அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறான நிலைமையிலேயே தனது கைதை தடுத்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி அவர், நேற்று தனது சட்டத்தரணி ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button