இலங்கை

செம்மணிக்கு செல்லவுள்ள நீதியமைச்சர்!; மனிதப் புதைகுழி விவகாரத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கை

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாரபட்சமின்றி நீதி வழங்குவதில் தற்போதைய அரசு மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வருகின்றது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து நேரில் ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் செம்மணிக்கு விசேட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நாம் ஆரம்ப காலம் முதற்கொண்டே மிகவும் ஆழமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றோம்.

கடந்த கால ஆட்சிகளில் இவ்வாறான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்படும் போது, அவற்றை மூடி மறைக்கும் செயற்பாடுகளே பரவலாக அரங்கேறின. ஆனால், எமது அரசு அவ்வாறு செய்யாது, உண்மை கண்டறியும் பணிகளுக்காகத் தேவையான நிதியொதுக்கீடுகளைச் செய்து வருகின்றது.

நாட்டில் பல்லின சமூகங்களுக்கு இடையில் உண்மையான நல்லிணக்கத்தையும், தமிழ் மக்களிடையே அரசு மீதான நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டுமாயின் இவ்வாறான வெளிப்படையான நகர்வுகளை முன்னெடுப்பது அவசியமாகும்.

இதன் முதற்கட்டமாக, எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் செம்மணிப் பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்வதுடன், அது குறித்து ஆழமான கலந்தாலோசனைகளையும் முன்னெடுக்கவுள்ளார்.

அதேபோன்று, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் யாழ்ப்பாணத்துக்கு விசேட விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பகுதியின் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து ஆராயப்படவுள்ள இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தலைவர்களுக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button