உலகம்

ருவாண்டா அகதிகள் புகலிட ஒப்பந்தம்; பிரித்தானியாவிற்குப் பெருவெற்றி!

ருவாண்டா அகதிகள் புகலிட ஒப்பந்த வழக்கில், பிரித்தானிய அரசுக்கு ஆதரவாகச் சர்வதேச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதன் மூலம் ருவாண்டாவிற்கு மில்லியன் கணக்கான பவுண்டுகளை இழப்பீடாக வழங்க வேண்டிய கட்டாயத்திலிருந்து பிரித்தானியா தப்பியுள்ளது.

ருவாண்டாவின் நிதியுதவிக் கோரிக்கை

பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளை ருவாண்டாவிற்கு அனுப்பிப் பராமரிப்பதற்காக, முந்தைய கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கத்தால் ஒரு சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் செய்யப்பட்டது.

எனினும், கடந்த 2024 ஆம் ஆண்டு பிரித்தானிய பிரதமராகப் பதவியேற்ற கீர் ஸ்டார்மர் (Keir Starmer) இத்திட்டத்தை அதிரடியாக இரத்து செய்தார். இந்த ஒப்பந்தம் திடீரென இரத்து செய்யப்பட்டதால், தங்களுக்குக் குறைந்தது 60 மில்லியன் பவுண்டுகள் (80 மில்லியன் டொலர்) இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்று ருவாண்டா கோரியிருந்தது.

இது தொடர்பான வழக்கு நெதர்லாந்தின் ஹேக் (The Hague) நகரில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந் நிலையில் வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட நடுவர் மன்ற அமர்வு, ருவாண்டாவின் நிதியுதவிக் கோரிக்கைகளை முற்றிலும் நிராகரித்துள்ளது.

கடந்த 2024 நவம்பரில் இருநாடுகளுக்கும் இடையே பரிமாறப்பட்ட இராஜதந்திர குறிப்புகளின்படி, 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளின் ஏப்ரல் மாதங்களில் பிரித்தானியா வழங்கவிருந்த கூடுதல் தொகைகளைக் கோர மாட்டோம் என்று ருவாண்டா ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் உள்நாட்டுப் போரில் ருவாண்டாவின் தலையீடு இருப்பதாகக் கூறி லண்டன் தனது நிதியுதவிகளை நிறுத்தியதால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு ஏற்கனவே கசப்படைந்திருந்தது.

இந்நிலையில், இந்தத் தீர்ப்பு ருவாண்டாவிற்குப் பலத்த பின்னடைவாகவும், பிரித்தானிய அரசுக்குப் பெரும் நிதிப் பக்கபலமாகவும் அமைந்துள்ளதாக சர்வதீச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button