இலங்கை

மாகாண சபைகளுக்கு எதிராக நாட்டைத் தீக்கிரையாக்கியது ஜே.வி.பியே!; ராஜித கடும் சாடல்

“மாகாண சபைத் தேர்தல் முறைமைக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, நாடு முழுவதும் தீவைக்கும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டது ஜே.வி.பி.தான்” என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு ஆளுங்கட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையின் ஆரம்பகால அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபை முறைமைகளுக்குத் தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் மக்கள் விடுதலை முன்னணியினரே முக்கிய பங்கு வகித்திருந்தனர்.

வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, புனித தலதா மாளிகை மீது முதலாவதாகத் தாக்குதல் நடத்தவில்லை. ஜே.வி.பி தான் கடந்த 1989 ஆம் ஆண்டு முதன்முதலில் தலதா மாளிகை மீது ஆயுதத் தாக்குதலை நடத்தியிருந்தது.

அந்தப் பீதி நிலவிய காலகட்டத்தில், மாகாண சபை முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜே.வி.பி. நாடு முழுவதும் அரச சொத்துக்களுக்குத் தீவைக்கும் பேரழிவுச் சம்பவங்களில் ஈடுபட்டது. இவர்களது வன்முறைக் கலாசாரத்தினால் அன்றைய காலகட்டத்திலேயே அரசுக்கு 288 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பாரிய நிதி இழப்பு ஏற்பட்டது.

இவ்வாறு ஒட்டுமொத்த நாட்டுக்கும் தீ வைத்து, நாட்டின் பொருளாதாரத்தை அழித்த ஜே.வி.பி. தான், இன்று மேடைகளில் ஏறி நின்று கடந்த 75 ஆண்டுகாலப் பாரம்பரிய அரசியல் ஆட்சியை ‘நாட்டின் சாபம்’ என்று தம்பட்டம் அடிக்கின்றது. இலங்கையின் அரசியல் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்து, உண்மையில் யார் இந்த நாட்டுக்குச் சாபமாகச் செயற்பட்டார்கள் என்ற உண்மையை இன்றைய இளம் தலைமுறையினர் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் எமது அரசியல் பயணத்தில் கட்சிகளைத்தான் மாற்றினோம். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியினரோ அதிகாரத்துக்காகத் தங்களது அடிப்படைக் கொள்கையையே முற்றாக மாற்றியுள்ளார்கள். அன்று மாகாண சபைத் தேர்தல் முறைமைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய மக்கள் விடுதலை முன்னணி, இன்று தாங்கள் ஆட்சியில் இருந்துகொண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தட்டிக்கழித்து, அதனைத் தொடர்ந்து பிற்போட்டு வருகின்றது.” – என்று ராஜித சேனாரத்ன மேலும் சாடினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button