தீவுப் பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்க நடவடிக்கை எடுங்கள்; அதிகாரிகளுக்கு அமைச்சர் சந்திரசேகர் பணிப்பு

நெடுந்தீவு, ஊர்காவற்துறை, காரைநகர் மற்றும் வேலணை ஆகிய தீவுப் பகுதிகளில் நிலவும் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர், விவசாயம் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இவ்விடயங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் வேலணை பிரதேச செயலகத்தில் அமைச்சர் தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ம.பிரதீபன், பாராளுமன்ற உறுப்பினர்கள் க. இளங்குமரன் மற்றும் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை பிரதிநிதிகள், துறைசார் அதிகாரிகள், கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதன்போது, தீவுப் பகுதிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்களுக்கான தங்குமிட வசதி மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து அமைச்சர் கவலை வெளியிட்டார். குறிப்பாக நெடுந்தீவு பகுதியில் பாடசாலை கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணும் வகையில் விசேட செயற்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
நெடுந்தீவு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் “நெடுந்தாரகை” மற்றும் “வடதாரகை” படகுகளின் திருத்தப்பணிகள் நிறைவடைந்த பின் அடுத்த மாதத்தில் சேவைக்கு கையளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக நெடுந்தீவுக்கு புதிய ஆர்ஓ பிளாண்ட் அமைப்பதற்கான நிதியை திறைசேரி ஊடாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
மேலும், தீவுப் பகுதிகளில் வைத்தியர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், அவசர மருத்துவ சேவைகளுக்காக அம்புலன்ஸ் வண்டிகள் தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அனலைதீவுக்கு விரைவில் அம்புலன்ஸ் வண்டி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீவுப் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளை புனரமைப்பதற்காக உலக வங்கியின் நிதி உதவியுடன் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 2500க்கும் மேற்பட்ட மலசலகூடங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நீண்டகாலமாக இடம்பெற்று வரும் கால்நடை திருட்டுக்களை கட்டுப்படுத்த பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மண்டை தீவு சோதனைச் சாவடியின் பாதுகாப்பை கடற்படையுடன் இணைந்து மேலும் பலப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், அனலைதீவு, புங்குடுதீவு மற்றும் குறிகட்டுவான் பகுதிகளில் இலங்கை வங்கியின் ஏரிஎம் இயந்திரங்கள் அமைப்பதற்கான தேவையும் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அதற்கும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
![]()