இந்தியா

“15 நாட்களில் 25 கொலைகள், 19 பாலியல் குற்றங்கள்… என்ன செய்யப் போகிறீர்கள் முதல்வரே?”

“தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதல்வர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்” என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.

கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும், கோவையில் ஓர் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது. முதல்வரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது. முதல்வரே, இது தமிழ்நாடா, உத்தரப் பிரதேசமா?

எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதல்வர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.

நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதல்வர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button