ஜனாதிபதிக்கும் அரசிற்கும் மேலாக இருப்பவர் ரில்வினே!; பெலவத்தையில் இருந்தே ஆட்சி என்கிறார் முஜிபூர் எம்.பி.

மாகாண சபைகள் தேர்தல் இந்த வருடத்தில் நடத்தப்படாது என்று அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் வகிக்காத ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறுவதானது, ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கும் மேலாக தீர்மானங்களை எடுக்கும் நபர் யார் என்பதனை வெளிப்படுத்துகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன்னால் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜே.வி.பி பொதுச் செயலாளர் அரசாங்கத்தில் என்ன பதவி வகிக்கின்றார்? அவர் மாகாண சபைகள் அமைச்சரா? இல்லையென்றால் அவர் நிதி அமைச்சரா? அல்லது அரச இயந்திரத்தில் ஏதாவது பதவியில் இருக்கின்றரா? இல்லையென்றால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரா? ஆனால் அவர் அவ்வாறு எந்தவொரு பதவியிலும் இல்லை. இவ்வாறான ஒருவர் மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படாது என்று கூறுகின்றார். இது பாரதூரமான விடயமாகும்.
இதனாலேயே இந்த நாட்டை பெலவத்தையில் இருந்தே ஆட்சி செய்கின்றனர் என்று நாங்கள் கடந்த காலங்களில் கூறிவந்தோம். ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், எம்.பிக்கள் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர்களுக்கெல்லாம் மேலே ஒருவர் இருக்கின்றார் என்பதனையும் கூறி வந்தோம். மேலே இருப்பவர் யார் என்பது ரில்வின் சில்வாவின் கருத்துக்கள் மூலம் தெளிவாகியுள்ளது.
இதேவேளை அவர் ஜே.வி.பி அலுவலகத்தை திறப்பதற்காக யாழ்ப்பாணம் செல்லவில்லை. தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தை திறந்து வைக்கவே அவர் அங்கு சென்றுள்ளார். இதன்படி தேசிய மக்கள் சக்தி என்று கூறிக்கொண்டு ஜே.வி.பி மக்களை ஏமாற்றுவதற்காகவே தெரிகின்றது என்றார்.
![]()