முச்சந்தி

ட்ரம்பின் சீன விஜயம் – புட்டினின் சீன விஜயம்: உலக அதிகார அரசியலின் இரு வேறு முகங்கள்…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ட்ரம்பின் அவர்களின் சீன விஜயமும், புட்டினின் சீன விஜயமும் வெளிப்படையாக ஒரே நிகழ்வைப் போல தோன்றினாலும், அதன் அரசியல் உள்ளடக்கம் முற்றிலும் வேறுபட்டது. ஒருவர் சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்த முயல்கின்றார். மற்றொருவர் சீனாவின் ஆதரவுடன் மேற்கத்திய அழுத்தங்களை எதிர்கொள்ள முயல்கிறார். ட்ரம்ப் – சீனா உறவு என்பது அவநம்பிக்கையுடன் கூடிய வர்த்தக உறவு எனில், புட்டின் – சீனா உறவு அரசியல் தேவையால் வலுப்பெற்ற கூட்டணி எனவும் வறையருக்கலாம்)
உலக அரசியலில் சீனா இன்று தவிர்க்க முடியாத மைய சக்தியாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய உலக ஒழுங்கை சவாலுக்கு உட்படுத்தும் வல்லரசாகவும், உலக வர்த்தகத்தின் இதயமாகவும், புதிய புவிசார் அரசியலின் தளமாகவும் சீனா திகழ்கிறது. இந்த சூழலில் ட்ரம்ப் மேற்கொண்ட சீன விஜயமும், புட்டின் மேற்கொண்ட சீன விஜயமும் உலக அரசியலில் இரு வேறு அரசியல் தத்துவங்களையும், இரு வேறு அதிகார நோக்கங்களையும் பிரதிபலிக்கின்றன.
ஒருவர் போட்டியாளராக சீனாவை அணுகினார். மற்றொருவர் கூட்டாளியாக அணுகினார். இந்த இரு விஜயங்களும் உலக சக்தி சமநிலையின் மாற்றத்தை புரிந்துகொள்ள முக்கியமான சாளரங்களாக இருக்கின்றன.
ட்ரம்பின் சீன விஜயம்:
ட்ரம்பின் சீன விஜயம் என்பது போட்டியுடனான பொருளாதார நட்பாக இருந்தாலும் புட்டினின் விஜயம் இதற்கு மாறுபம்டதாகவே உள்ளது.
ட்ரம்ப் சீனாவுக்கு விஜயம் செய்தபோது, அது வெறும் மரியாதை விஜயமாக மட்டுமே பார்க்கப்படவில்லை. “America First” கொள்கையுடன் ஆட்சிக்கு வந்த ட்ரம்ப், சீனாவின் பொருளாதார எழுச்சியை அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு நேரடி சவாலாகக் கண்டார்.
அவரது விஜயத்தில் சீனாவுடன் பல பில்லியன் டாலர் வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆனால் அதே நேரத்தில், சீனா அமெரிக்க தொழில்துறை வேலை வாய்ப்புகளை பறித்து வருவதாகவும், அநியாய வர்த்தக நடைமுறைகளை பின்பற்றுவதாகவும் ட்ரம்ப் கடுமையாக குற்றஞ்சாட்டியும் வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருகிறது. சீன பொருட்களுக்கு அதிக வரிகள் விதிக்கப்பட்டன. தொழில்நுட்பத் துறையில் Huawei போன்ற நிறுவனங்கள் மீது பாரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ட்ரம்பின் சீன அணுகுமுறை இரட்டை தன்மையுடையதாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஒரு பக்கம் சீன சந்தையை அமெரிக்க நிறுவனங்களுக்கு திறக்க முயற்சி செய்வதைடன், மற்றொரு பக்கம் சீனாவின் உலக செல்வாக்கை கட்டுப்படுத்த அமெரிக்க முயற்சி செய்கிறது. அதனால் ட்ரம்பின் சீன விஜயம் நட்பின் பயணம் அல்ல; அது பொருளாதாரப் போட்டியின் அரசியல் பயணம் என்று சொல்லலாம்.
புட்டினின் சீன விஜயம்:
புட்டினின் சீன விஜயம் முழுமையாக மேற்கை எதிர்க்கும் மூலோபாய கூட்டணி என்று கூட கருத இடமுண்டு.
புட்டின் சீனாவுக்கு மேற்கொண்ட விஜயங்கள் முற்றிலும் வேறுபட்ட அரசியல் பின்னணியைக் கொண்டிருந்தன. குறிப்பாக உக்ரைன் போருக்குப் பின்னர் ரஷ்யா மேற்கத்திய நாடுகளின் தடைகளால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், சீனா ரஷ்யாவின் முக்கிய மூலோபாய நண்பராக உருவெடுத்தது.
புட்டின் – சீன அதிபர் ஹீ ஜின்பிங் சந்திப்புகள் வெறும் இருதரப்பு உறவுகளாக இல்லாமல், மேற்கத்திய ஆதிக்கத்திற்கு மாற்றான உலக ஒழுங்கு உருவாக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகின்றன.
அதேவேளை ரஷ்யா மற்றும் சீனா இணைந்து, அமெரிக்க டொலர் ஆதிக்கத்திற்கு மாற்று வர்த்தக அமைப்புகள்,எரிசக்தி கூட்டுறவுகள்,
ராணுவ ஒத்துழைப்புகள்,BRICS விரிவாக்கம், பல்துருவ உலக ஒழுங்கு
போன்றவற்றை முன்னெடுத்து வருகின்றன. புட்டினின் சீன விஜயங்களில் பொருளாதாரப் போட்டியை காட்டிலும் அரசியல் உயிர்வாழ்வு மற்றும் மூலோபாய கூட்டணி அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.
எவ்வாறாயினும் சீனாவின் பார்வையில் இந்த இரு தலைவர்கள் வெவ்வேறு அரசியல் காரணங்களுக்காக தங்கள் நாட்டுக்கு விஜயம் செய்தனர் என்பதை மனதில் கொண்டுள்ளனர். அத்துடன்
சீனா ட்ரம்பையும் புட்டினையும் ஒரே கோணத்தில் பார்க்கவில்லை. ட்ரம்ப் சீனாவுக்கு பொருளாதார சவால்,
தொழில்நுட்ப எதிரி, உலக வர்த்தக போட்டியாளராக தொடர்ந்து இருந்து வந்துள்ளார்.
ஆனால் புட்டின் அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிரான கூட்டாளராக விளங்கி வருகிறார். சீனாவுடன்
எரிசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டு
மேற்கத்திய தடைகளுக்கு எதிரான மூலோபாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் ட்ரம்ப் – சீனா உறவு என்பது அவநம்பிக்கையுடன் கூடிய வர்த்தக உறவு எனில், புட்டின் – சீனா உறவு அரசியல் தேவையால் வலுப்பெற்ற கூட்டணி எனவும் வறையருக்கலாம்.
 
 
அதேவேளை மாஸ்கோ – பெய்ஜிங் கூட்டணியின் முக்கிய நோக்கம் பல்துருவ உலகம் உருவாக்குவதாகும். அதாவது உலக அரசியல் ஒரே நாட்டின் கட்டுப்பாட்டில் இல்லாமல் பல சக்தி மையங்களால் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே அவர்கள் வாதம். இதற்காக BRICS கூட்டமைப்பு பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளால் ஆரம்பிக்கப்பட்ட BRICS, தற்போது விரிவடைந்து வருகிறது.
சீனாவும் ரஷ்யாவும் கடந்த சில ஆண்டுகளாக “எல்லையற்ற நட்பு” (No Limits Partnership) என்ற அடிப்படையில் உறவை வலுப்படுத்தி வருகின்றன. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஆதிக்கத்திற்கு மாற்றாக பலதுருவ உலக ஒழுங்கை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே இரு நாடுகளையும் நெருக்கமாக இணைத்துள்ளது.
புட்டினின் இந்த விஜயத்தின் மையப் பொருளாக பொருளாதாரமும், ஆற்றல் பாதுகாப்பும் அமைந்திருந்தன. மேற்கத்திய தடைகள் காரணமாக ஐரோப்பிய சந்தைகளில் சவால்களை எதிர்கொள்ளும் ரஷ்யா, தனது எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்காக சீனாவை மிக முக்கிய சந்தையாகக் கருதுகிறது. சீனாவும் தனது தொழில்துறை வளர்ச்சிக்குத் தேவையான மலிவான எரிசக்தியை ரஷ்யாவிலிருந்து பெற ஆர்வமாக உள்ளது. இதனால் ‘சைபீரிய சக்தி’ (Power of Siberia) போன்ற எரிவாயு திட்டங்கள் இருநாடுகளின் உறவின் முக்கிய அங்கமாக மாறியுள்ளன.
அதேவேளை, இந்த விஜயம் இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது. உக்ரைன் போரில் ரஷ்யா மேற்கத்திய ஆயுத உதவிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், சீனாவின் அரசியல் ஆதரவு மாஸ்கோவிற்கு முக்கிய பலமாக உள்ளது. சீனா நேரடியாக ஆயுத உதவி வழங்குவதாக மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டினாலும், பெய்ஜிங் அதை மறுத்து வருகிறது. இருப்பினும், இரு நாடுகளின் கூட்டு இராணுவப் பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்புகள் அதிகரித்துவருகின்றன.
புதிய உலக ஒழுங்கில்
21ஆம் நூற்றாண்டின் உலக அரசியலில் மிகப் பெரிய மாற்ற சக்திகளாக உருவெடுத்துள்ள இரண்டு நாடுகள் ரஷ்யாவும் சீனாவும் ஆகும். ஒரு காலத்தில் அமெரிக்கா தலைமையிலான ஒற்றைத் துருவ உலக அமைப்பு உலக அரசியலை வழிநடத்தியது. ஆனால் இன்று அந்த அமைப்பு சவாலுக்குள்ளாகியுள்ளது. இந்த மாற்றத்தின் மையத்தில் மாஸ்கோ – பெய்ஜிங் கூட்டணி அமைந்துள்ளது.
ரஷ்யாவின் இராணுவ வலிமையும் சீனாவின் பொருளாதார சக்தியும் இணையும் போது, அது சாதாரண இருதரப்பு உறவாக மட்டும் இல்லாமல் “புதிய உலக ஒழுங்கு” உருவாக்க முயலும் அரசியல் சக்தியாக மாறியுள்ளது.
1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் சிதைந்தபின், அமெரிக்கா உலகின் ஒரே அதி சக்தியாக உருவெடுத்தது. நேட்டோ விரிவாக்கம், மேற்கத்திய பொருளாதார ஆதிக்கம், அமெரிக்காவின் இராணுவ தலையீடுகள் ஆகியவை உலக அரசியலை நிர்ணயித்தன. ஆனால் ரஷ்யா இதை தனது பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாகக் கண்டது. மறுபுறம் சீனா, உலக வர்த்தக மையமாக உயர்ந்தபோதும், அமெரிக்காவின் ஆசிய-பசிபிக் தலையீடுகளை கவனித்துக் கொண்டிருந்தது. இந்த சூழலில் மாஸ்கோவும் பெய்ஜிங்கும் தங்கள் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு நலன்களை ஒருங்கிணைக்கத் தொடங்கின.
புட்டினின் தற்போதைய சீன விஜயம் BRICS கூட்டமைப்பின் எதிர்காலத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிரிக்ஸ் அமைப்பை அமெரிக்க டொலர் ஆதிக்கத்திற்கு மாற்றாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ரஷ்யா மற்றும் சீனாவிடையே வலுவடைந்துள்ளது. தேசிய நாணயங்களில் வர்த்தகம் செய்வது, மாற்று வங்கி அமைப்புகள் உருவாக்குவது போன்ற முயற்சிகளும் விவாதிக்கப்பட்டுள்ளன.
உலக அரசியலின் புதிய சமநிலை
இரு வல்லரசு அதிபர்களின் இந்த இரு விஜயங்களும் உலக அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை சுட்டிக் காட்டுகின்றன. பனிப்போருக்குப் பின்னர் அமெரிக்கா ஒரே வல்லரசாக இருந்த காலம் மாறி வருகிறது. சீனா மற்றும் ரஷ்யா இணைந்து பல்துருவ உலக ஒழுங்கை உருவாக்க முயற்சிக்கின்றன. அதேவேளை அமெரிக்கா தனது ராணுவ ஆதிக்கத்தை பாதுகாக்க புதிய பொருளாதார மற்றும் இராணுவ கூட்டணிகளை வலுப்படுத்துகிறது. இதனால் உலகம் மீண்டும் புதிய வகை பனிப் போர் சூழலுக்குள் நகர்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் அவர்களின் சீன விஜயமும், ரஷ்ய அதிபர் புட்டின் அவர்களின் சீன விஜயமும் வெளிப்படையாக ஒரே நிகழ்வைப் போல தோன்றினாலும், அதன் அரசியல் உள்ளடக்கம் முற்றிலும் வேறுபட்டது. ஒருவர் சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்த முயன்றார். மற்றொருவர் சீனாவின் ஆதரவுடன் மேற்கத்திய அழுத்தங்களை எதிர்கொள்ள முயன்றார்.
இந்த இரு விஜயங்களும் இன்று உலக அரசியல் எந்த திசையில் நகர்கிறது என்பதை புரிந்துகொள்ளும் முக்கிய அரசியல் குறியீடுகளாகவே பார்க்கப்படுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button