உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சக்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று சிறைக் கைதியாக இருந்த பிள்ளையானுடன் இரகசிய சந்திப்பை மேற்கொண்டதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் அசாத் மௌலானா வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்சினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்போது கடந்த காலத்தல் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோர் சென்றிருந்ததாகவும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், பிணையில் விடுவிப்பதாக அவர்கள் கூறியிருந்தமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஒரு வாரத்திற்குள் பிள்ளையானுக்கு பிணை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக இதன்போது மகிந்த, பசில் மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் பிள்ளையானிடம் உறுதியளித்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதன்போது நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையானின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான அசாத் மௌலானாவிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல்களை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது பிரான்சில் வசித்து வரும் அசாத் மௌலானாவிடம் இருந்து பிரான்சில் உள்ள இலங்கை தூதரகத்தில் வைத்து இந்த வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் வாக்குமூல ஆவணங்களும் நேற்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
![]()