இலங்கை

17 ஆண்டுகளாக தமிழ் அரசியல் தலைமைகள் தடம் புரண்டு விட்டன; அருட்தந்தை சத்திவேல்

கடந்த 17 ஆண்டுகளாக தமிழர் தாயக அரசியலை மக்கள் மையப்படுத்தி பலமடையச் செய்வதில் பெரும்பாலான தமிழ் அரசியல் தலைமைகள் அரசியல் தடம் புரண்டு, அரசியல் அறம் விலகி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களித்து பதவியிலும் அமர்த்தும் நிலைக்கு தள்ளியுள்ளனர் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வெறும் நிகழ்வு அல்ல.இது எமது வலிகளுக்கான அரசியல் திசை காட்டி. மக்களின் அரசியல் வலிமையையும் அதற்கான மக்கள் திரட்சியையும் உலகிற்கு காட்டி நிற்கும் மக்கள் தளம்.

ஆனால் அரசியல் வலி சுமந்து 17ஆவது ஆண்டினை தொட்டு நிற்கின்ற வேளையில் நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன? எந்த அரசியல் திசையை நோக்கி பயணிக்கின்றோம்? அரசியல் வலி சுமக்கும் ஓர் இனமாக மக்கள் அரசியலை பலமடைய செய்வதற்கும், எம் அரசியல் எதிரிகளுக்கு எதிராக எம் மக்கள் பலத்தை எந்த அளவிற்கு காட்டி உள்ளோம் என்பதற்கான விடை தேடுகின்ற போதுதான் இவருடத்தில் நாம் ஏற்றுகின்ற சுடர் உயிர் தியாகிகளுக்கு கௌரமாகவும், எம் அரசியல் எதிரிகளுக்கு அரசியல் விழிப்பையும் ஏற்படுத்தும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை எமது விடயத்திலும் தோல்வி கண்ட அமைப்பாகவே தெரிந்த போதிலும் எம்மவர்கள் அங்கு செல்வதை புனித யாத்திரையாக்கி ஒவ்வொரு வருடமும் பயணிக்கின்றனர். அதிலும் கூட்டு தன்மை கிடையாது. தனித்தனியாக சொர்க்கம் போக நினைப்பதாகவே தெரிகிறது .ஐ.நா மனித உரிமை பேரவைக்கு கடிதம் எழுதுவதிலும் இதே நிலையே தொடர்கின்றது.

கடந்த 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதில் தொடங்கி அண்மையில் வடக்கு கிழக்கு ஆயர்களின் முயற்சி , தமிழ் சட்டத்தரணி களின் முயற்சி எல்லாமே தோல்வியாகவே நாம் காண்கின்றோம்.எமது அரசியல் விடயத்திலும் சர்வேச ராஜதந்திரிகளை கையாள்வதிலும் நாம் இருளில் நடப்பதாகவே தெரிகிறது. அவர்கள் எமக்கு பாடம் சொல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள், மாவீரர் தின நிகழ்வுகள் எல்லாம் கோயில் திருவிழாக்களாகியுள்ளதாகவே பலர் கருதுகின்றனர். திருவிழாக்கள் உபயக்காரர்களைப் போல ஒழுங்கமைப்பாளர்கள் அவற்றை தத்தமது அடையாளத்திற்கான காட்சிகளாக்கி மக்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை போதை நிலைக்கு தள்ளுவதை என்னவென்று கூறுவது?

கடந்த 17 ஆண்டுகளாக தமிழர் தாயக அரசியலை மக்கள் மையப்படுத்தி பலமடையச் செய்வதில் பெரும்பாலான அரசியல் தலைமைகள் அரசியல் தடம் புரண்டு, அரசியல் அறம் விலகி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களித்து பதவியிலும் அமர்த்தும் நிலைக்கு தள்ளியுள்ளனர் எனலாம்.

அவர்களை தமிழர்களின் குருதி தோய்ந்த நிலத்திற்கு அழைத்து வந்து செங்கம்பளம் விரித்து மேள தாள ரகத்தோடு மேடைக்கு அழைத்துச் செல்வதோடு நின்றுவிடாது செல்ஃபி எடுத்து மகிழும் தலைமுறையினரும் உருவாகியுள்ளமைக்கு நாமே காரணம் என சிந்திக்காதும் உள்ளனர்.இதுவே எமது அரசியல் அவலம்.

இது இவ்வாறிருக்க முள்வாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் பகிரப்படும் கஞ்சியில் சுவை தேடும் கூட்டமும் உருவாகியுள்ளதோடு, சுவையூட்டுவோரும் உள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் தின நிகழ்வுகள், தியாகிகள் தினம் தொடர்பில் வடக்கு கிழக்கு தழுவிய பொது கட்டமைப்பு உருவாக்கப்படுதலும் அதன் அரசியல் வழிதடமும் வரையப்படல் வேண்டும்.அத்தோடு மேற்கூறிய நிகழ்வுகளுக்கான பொது விதிகளும் மக்கள் மயப்படுத்தலும் வேண்டும். அதுவே எம் அரசியலை சரியான திசையில் பயணிக்க வழி சமைப்பதோடு மக்களை திரட்சி கொள்ளவும் செய்யும். எமது அரசியல் வழி பயணம் உயிர் தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்டது. அது தொடர்பான ஆழமான அரசியல் சிந்தனை மக்கள் பயப்படுத்துவதன் மூலமே எமது அரசியல் இலக்கை நோக்கி பயணிக்க முடியும். அதற்காக இவ் வருடம் தியாக சுடர் ஏற்றுவோம். ஒன்றான மக்களாக எழுவோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button