ஒரு மாதம் ஒருவர் வாழ 16,690 ரூபா போதுமா?; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி

ஒழுங்கமைந்த, வலுவான, வினைத்திறன் மிக்க அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றால், உண்மையான தகவல்கள், உண்மைகள் தரவுகளின் அடிப்படையில் அரச நிர்வாகமும் அரச கொள்கைகளும் தொழிற்பட வேண்டும். ஆனால் தற்போதைய அரசாங்கம் உண்மையான புள்ளிவிவரத் தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அரச கொள்கைகளை முன்னெடுக்கவிக்கலை. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சமர்ப்பித்துள்ள தரவுகளை களத்தில் உண்மை மற்றும் யதார்த்தத்துடன் ஒப்பிடும்போது அவை தரவுகளாக அமைந்து காணப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
திஸ்ஸமஹாராம காசிங்கமவில் அமைந்துள்ள ஸ்ரீ சுபத்ராராம புராண விகாரையில் அம்பாந்தோட்டை மாவட்ட அதிகரன சங்க நாயகர் போகஹபலஸ்ஸே சோமிஸ்ஸர தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில்,
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக 2026 மார்ச் மாதத்தில் இந்நாட்டில் ஒரு நபர் வாழ ரூ.16,990 போதுமானது என்று தரவுகளை வெளியிட்டுள்ளன. 30 நாட்களுக்கும் உணவு மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள இந்த ரூ.16,690 போதுமானதாக அமைந்து காணப்படுகின்றனவா என்று மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் கணக்கெடுப்புகளின் பிரகாரம் கொழும்பு மாவட்டத்திற்கு ரூ.18,000 ம், கம்பஹா மாவட்டத்திற்கு ரூ.17,908 ம், களுத்துறை மாவட்டத்திற்கு ரூ.17,520 ம் என்ற அடிப்படைகளில் 30 நாட்களும் வாழ்வதற்கு போதுமான தொகையாக கணக்கிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது பரஸ்பரம் பிழையான தரவுகளாக அமைந்து காணப்படுகின்றன
இந்த தரவுகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை. இந்த தரவுகளை மையமாகக் கொண்டு வறுமை கோட்டை அரசாங்கம் தீர்மானித்து, அதனடிப்படையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது.
பொய்யான தரவுகளையே திணைக்களம் முன்வைத்துள்ளது. இந்நாட்டின் 30-40% மான மக்கள் வறுமை நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். பலருக்கு தங்குவதற்கு சரியான இடமோ சரியான வாழ்வாதாரமோ இல்லை. உணவு மற்றும் உணவு அல்லாத தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். மறுபக்கம் நாளுக்கு நாள் ரூபாவின் பெறுமதி மதிப்பிழந்துகொண்டிருக்கும் சூழலில், மேலதிக செலவுகளும் ஏற்படுகின்றன என்றார்.
![]()