முச்சந்தி

சுவிஸிருந்து யாழ் வந்தவரை கொலை செய்து நகை , பணம் கொள்ளை; சண்டிலிப்பாயில் கொடூரம்

சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து நகைகள்  பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் என்ற 67 வயதானவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நீண்ட காலமாக சுவிஸ் நாட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2 மாத காலமாக விடுமுறையில் வந்து சண்டிலிப்பாயில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் , கடந்த 14ஆம் திகதிக்கு பின்னர் அவருடன் குடும்பத்தார் தொடர்பு கொள்ள முடியாத நிலையில்,கடந்த சனிக்கிழமை அது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸார் வீட்டுக்கு சென்ற போது துர்நாற்றம் வீசியதை அடுத்து,வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்ற போது,உடலில் வெட்டு காயங்களுடன் முதியவரின் சடலம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் ,சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் , வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமராக்கள் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில் , கமரா சேதமாக்க முன்னரான பதிவுகளின் அடிப்படையில் 14ஆம் திகதி இரவு வேளை முகமூடி அணிந்த இருவர் சமையலறை வழியாக உள்நுழைந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் புகுந்தவர்கள் , வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களை சேதமாக்கிய பின்னர் , முதியவரை படுகொலை செய்து , வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேவேளை முதியவரின் உடற்கூற்று பரிசோதனையின் போது உடலில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் கூரிய ஆயுதங்களால் குத்தப்பட்டமைக்கான அடையாளங்களும் காணப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளில் பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button