இலங்கை

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக தயார்! – மஹிந்த ராஜபக்ஷ

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று, குறிப்பிட்ட தினத்தில் தாம் ஆஜராகத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்றிருந்த போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, எதிர்வரும் 12 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு 06 எயார்பஸ் A-330 விமானங்கள் மற்றும் 08 எயார்பஸ் A-350 ரக விமானங்களை கொள்வனவு செய்தபோது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அப்போதைய தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

விசாரணைகளின் போது, தமக்குக் கிடைத்த 02 மில்லியன் டொலர்களில் 20 மில்லியன் ரூபாவை அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கும், 60 மில்லியன் ரூபாவை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வழங்கியதாக கபில சந்திரசேன கூறியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

 

அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷவிடம்,

இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை குறித்துக் கேட்கப்பட்டது.

 

இதற்குப் பதிலளித்த அவர், நிச்சயமாக நான் ஆணைக்குழுவில் முன்னிலையாவேன். நாம் அங்கு சென்றுதானே ஆகவேண்டும் என பதிலளித்துள்ளார்.

 

மறைந்த கபில சந்திரசேனவின் இறுதிச் சடங்குகள் இன்றையதினம் மாலை 5.00 மணிக்கு பொரள்ளை பொது மயானத்தில் நடைபெறவுள்ள.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button