சீனாவில் 2 முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு மரண தண்டனை

சீனாவில், ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஷி ஜிங்பிங் அமைச்சரவையில் கடந்த 2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்தவர் வெய் ஃபெங்கே. இவர், லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவருக்குப் பிறகு அந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட லீ ஷாங்ஃபூ என்பவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதால், அவரும் சில மாதங்களிலேயே பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், இருவரும் சீனாவின் ஆளுங்கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும் கடந்த 2024 ஆம் ஆண்டு நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஊழல் குற்றஞ்சாட்டப்பட்ட சீனாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் வெய் ஃபெங்கே மற்றும் லீ ஷாங்ஃபூ ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் (மே 7) தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக, சீன அதிபர் ஜிங்பிங் தலைமையிலான மத்திய ராணுவ ஆணையத்தில் இடம்பெற்றிருந்த 2 முன்னாள் அமைச்சர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
மேலும், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஊழலுக்கு எதிராக அதிபர் ஜிங்பிங் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மூலம் இதுவரை குற்றஞ்சாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான அதிகாரிகள், ராணுவ தளபதிகள் உள்ளிட்டோருக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
![]()