இது ‘எல் போட் ‘ அரசு என்பது உறுதியானது!; ஹர்ஷ டி சில்வா எம்.பி. சாடல்

சட்டத்தின் பிரகாரம் இரு தரப்பு கடன் பெறுகைக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான பொறுப்பு மாத்திரமே வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு உண்டு.25 இலட்சம் டொலர் செலுத்தலில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் எவ்வாறு தொடர்பு பட முடியும் எனகே கேள்வி எழுப்பிய அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரும், எம்.பி.யுமான ஹர்ஷ டி சில்வா பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக திறைசேரியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு நிதி முகாமைத்துவம் தொடர்பில் அனுபவம் கிடையாது ‘எல் போட் ‘ அரசாங்கம் என்பது உறுதியாகியுள்ளது எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமைஇடம் பெற்ற கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
25 இலட்சம் டொலர் மோசடி தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்னிலையான திறைசேரியின் செயலாளர் மற்றும் அதிகாரிகள் அழைக்கப்பட்ட போது அங்கு வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் பற்றி நாங்கள் இதுவரையில் பகிரங்கப்படுத்தவில்லை.விசாரணைகளுக்காக இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. ஏன் இந்த திணைக்களம் இவ்விடயத்தில் தொடர்புப்பட்டது என்ற கேள்வியுள்ளது.சட்டத்தின் பிரகாரம் இரு தரப்பு கடன் பெறுகைக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான பொறுப்பு மாத்திரமே வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு உண்டு. கடன் செலுத்தல் அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் ஊடாகவே இடம்பெற வேண்டும் என்று சட்டத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இந்த கடன் செலுத்தலில் ஏன் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன?
என்ன செய்வது என்பது இன்று இவர்களுக்கே தெரியாமல் உள்ளது. ‘எல் போட் ‘ அரசாங்கம் என்பது உறுதியாகியுள்ளது. ஸ்ரீ லங்கா நிர்வாக சேவையின் உயரதிகாரிகள் தான் நிதியமைச்சின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது திட்டமிடல் துறைசார்ந்தவர்கள் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக திறைசேரியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு நிதி முகாமைத்துவம் தொடர்பில் அனுபவம் கிடையாது.செயலாளருக்கும், பணிப்பாளர் நாயகத்துக்கும் துறைசார்ந்த அனுபவம் இல்லாவிடின் முரண்பாடுகளே தோற்றம் பெறும்.
அமெரிக்க தபால் நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 6 இலட்சம் டொலர் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.பணிப்பாளர் நாயகத்துக்கு இந்த கொடுப்பனவுக்கு அனுமதியளிக்க முடியுமா? 25 இலட்சம் டொலர் திருடப்பட்டுள்ளது. யார் திருடர் என்பதை சி.ஐ.டி கண்டுபிடிக்க வேண்டும்.
25இலட்சம் டொலர் மோசடி பற்றி விளக்கமளிக்க அழைப்பு விடுத்தும் 3 வார காலமாக திறைசேரியின் செயலாளரும், பிரதி செயலாளரும் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்குவரவில்லை . இந்த விடயம் பற்றி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்ததன் பின்னரே இவர்கள் குழுவுக்கு முன்னிலையானார்கள்.
பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது. நாட்டு மக்களே இதனையும் செலுத்த வேண்டும். பெலவத்த காரியாலயம் ஒன்றும் செலுத்தாது. அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு முழுமையான அதிகாரம் உண்டு. அதிகாரத்தை எவரும் கேள்வி கேட்க முடியாது. வெளிப்படையான வகையில் இந்த விடயத்தை ஆராய்வோம்.உண்மைகள் வெளிவரும் என்றார்.
![]()