இலங்கை

தையிட்டி ‘பவானி வீதி’ மீட்பு விவகாரம்; தவிசாளரை மிரட்டும் தொனியில் விசாரணை செய்த பலாலி பொலிஸார்!

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான ‘பவானி வீதி’யை மீட்கும் நடவடிக்கையைக் கைவிடுமாறு, தவிசாளர் சோ.சுகிர்தனை பலாலி பொலிஸார் அழைத்து அச்சுறுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் பிரதேச சபைக்குச் சொந்தமான பவானி வீதி காணப்படுவதை உறுதிப்படுத்திய தவிசாளர், கடந்த 28ஆம் திகதி நில அளவையாளர்கள் மூலம் அதனை அடையாளம் கண்டு அளவீடு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த வீதியை எதிர்வரும் 11ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும் என விகாராதிபதிக்கு தவிசாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

அக்கடிதத்தில், “11ஆம் திகதிக்குள் வீதி விடுவிக்கப்படாவிட்டால், 12ஆம் திகதி பிரதேச சபையினால் வேலி அகற்றப்படும். அவ்வாறு அகற்றப்பட்டால், அதற்கான செலவை விகாராதிபதியே செலுத்த வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிவித்தலுக்கு எதிராக விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, தவிசாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

இதன்போது, “வேலியை அகற்றினால் இன நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்பதால் அந்த முயற்சியை கைவிட வேண்டும். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பொலிஸார் தவிசாளரை மிரட்டும் தொனியில் கூறினார்கள் என்று தெரிகின்றது.

பொலிஸாரின் எச்சரிக்கைக்குப் பதிலளித்த தவிசாளர் சோ.சுகிர்தன், “சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நான் தயார். இது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதி என்பதற்கான ஆவணங்கள் எம்மிடம் உள்ளன. விகாராதிபதி வீதியை விடுவிக்காவிட்டால், நாம் வேலியை அகற்றி வீதியை மீட்போம். அதற்கு எதிராக பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யலாம். அதனை நாம் அங்கு சந்திப்போம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 28ஆம் திகதி விகாரை அமைந்துள்ள காணியை அளக்க முற்பட்டபோது, “காணிகள் விடுவிக்கப்படும்” என்ற உறுதிமொழியை மாவட்ட அல்லது பிரதேச செயலர் கடிதம் மூலம் வழங்கினால் மட்டுமே அளவீடு செய்ய அனுமதிப்போம் என காணி உரிமையாளர்கள் மறுத்திருந்தனர். இதன் காரணமாக அன்றைய தினம் காணி அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்டன என்று யாழ். மாவட்ட செயலர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button