தங்கள் காணிகளை விடுவிக்குமாறு மயிலிட்டி இராணுவ முகாமுக்கு முன்னால் மக்கள் போராட்டம்

வலிகாமம் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தங்கள் காணிகளை விடுவிக்குமாறு கோரி , காணி உரிமையாளர்கள் மயிலிட்டி இராணுவ முகாமுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1990 ஆம் ஆண்டு இந்தப் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறிய நிலையில் இராணுவம் காணிகளை கையகப்படுத்தியதாகவும் அந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் சென்று, மக்களுடன் கலந்துரையாடினார்.
மக்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்கள் கூறிய விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார். இது தொடர்பில் அரசாங்க அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், மக்களுக்குரிய காணிகள் கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டு வருகின்றது. இது விடயத்தில் நாம் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகின்றோம்.
மக்களுக்கு ஒப்படைக்கப்படும் காணிகளை உரிய வகையில், உரிய ஆவணங்களுடன் கையளிக்க வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினை நிரந்தரமாக தீரும். உங்கள் வசம் ஆவணங்கள் இருந்தால் நிச்சயம் உங்களுக்குரிய மண் உங்களுக்கே சொந்தமாகும்.
தேசிய பாதுகாப்புக்கு அத்தியாவசியம் அற்றது எனக் கருதப்படும் இடங்களை விடுவிக்குமாறு எமது அரசாங்கம் உரிய தரப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. எனவே, நிச்சயம் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்.” – என்றார்.
![]()