உலகம்

ஆயிரக் கணக்கானவர்களுக்கு ஐரோப்பாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய டிஜிட்டல் எல்லைப் பாதுகாப்பு முறையான ‘நுழைவு/வெளியேறும் அமைப்பு’ (Entry/Exit System – EES) கடந்த வெள்ளிக்கிழமை முதல் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த புதிய முறையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய முயன்ற ஆயிரக்கணக்கானோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 700 பேர் பாதுகாப்பு அச்சுறுத்தலாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிரஸ்ஸல்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவிற்குப் பயணம் செய்வதை அதிக பாதுகாப்பானதாகவும், எளிமையானதாகவும் மாற்றும் நோக்கில், கடவுச்சீட்டுகளில் முத்திரை குத்தும் பழைய முறைக்கு மாற்றாக இந்த டிஜிட்டல் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில், இதுவரை 52 மில்லியனுக்கும் அதிகமான எல்லைக் கடப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 27,000 முறை நுழைவு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

“EES மூலம், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் யார் நுழைகிறார்கள், எப்போது வெளியேறுகிறார்கள் என்பதை நாங்கள் முழுமையாகக் கட்டுப்படுத்துகிறோம்” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை ஆணையர் மேக்னஸ் ப்ரன்னர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் விசா காலத்தை மீறி தங்கியிருப்பவர்களை எளிதாகக் கண்டறிய முடியும் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அயர்லாந்து மற்றும் சைப்ரஸ் தவிர்த்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகள் மற்றும் நோர்வே, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகள் என மொத்தம் 29 நாடுகளில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளிலிருந்து குறுகிய காலப் பயணமாக வருபவர்கள், தங்களின் கைரேகை மற்றும் புகைப்படத்தைப் பதிவு செய்வது இனி கட்டாயமாகும். இந்த புதிய டிஜிட்டல் பதிவுக்கு சராசரியாக 70 வினாடிகள் மட்டுமே ஆகும் என்பதால் பயணிகள் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் நீண்ட வரிசைகள் ஏற்படக்கூடும் எனப் போக்குவரத்து நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

இந்த டிஜிட்டல் கோப்பு முறை மூலம் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் நிகழ்நேரத்தில் அச்சுறுத்தல்களைக் கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button