உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரி சஹ்ரான் காசிமே!; தாக்குதல்களை நடத்தவதற்கு உதவியவர்கள் சானி, ரவி செனவிரத்னவுமே

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரி பயங்கரவாதி சஹ்ரான் காசிமே .அவரும் அவரது குழுவினரும் குண்டுத் தாக்குதல்களை சிறப்பாக நடத்துவதற்கு உதவியவர்கள் குற்றப்புலனாய்வு பிரிவின் தற்போதைய பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் . இந்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரிவினைவாதிகளையும், புலம் பெயர் தமிழ் அமைப்புக்களையும் மகிழ்விப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் குற்றச்சாட்டை இராணுவத்தினர் மீது சுமத்த முயற்சிக்கிறது என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பு சம்புத்த ஜயந்தி மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ‘ உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடிச் செல்லல்’ என்ற நூல் வெளியீட்டு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
2019.04.21 ஆம் ஆண்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவம் பற்றி இன்றளவிலும் பேசப்படுகிறது. பிரதான சூத்திரதாரி யார் என்பது புரியாத புதிராகவே உள்ளது . குண்டுத்தாக்குதல்கள் பற்றி விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள், பாராளுமன்ற தெரிவுக்குழுக்களின் மற்றும் அமெரிக்காவின் எப்.பி.ஐ. அறிக்கை ஆகியவற்றை முழுமையாக ஆராய்ந்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரிவினைவாதிகளையும், புலம் பெயர் தமிழ் அமைப்புக்களையும் மகிழ்விப்பதற்காக தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குற்றச்சாட்டை இராணுவத்தினர் மீது சுமத்த முயற்சிக்கிறது.இராணுவத்தினர் 40 ஆயிரம் தமிழர்களை படுகொலை செய்தார்கள் என்று புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு சர்வதேச சட்டத்தில் வலுவிழந்துள்ள நிலையில், இந்த குண்டுத்தாக்குதல் ஊடாக இராணுவத்தினரை பழிவாங்க முயற்சிக்கின்றனர். ஏனெனில் இராணுவத்தில் பெரும்பான்மையான்மாக சிங்களவர்களே உள்ளார்கள். எமது இராணுவத்தினர் பழிவாங்கப்பட கூடாது என்பதற்காகவே இந்த பணியை நான் பொறுப்பேற்றேன்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடிச் செல்லல் என்ற நூலில் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறச் செய்வதற்கு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதை உறுதிப்படுத்த நியாயமான சாட்சிகள் உள்ளதா ?
இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இந்த தாக்குதல்களை நடத்தினார்கள் என்று குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கு சாதகமான சாட்சிகள் உள்ளதா? சஹ்ரான் காசிம் உட்பட பயங்கரவாதிகள் கோத்தபாய ராஜபக்சவுக்காக உயிரை தியாகம் செய்வதற்கான நோக்கம் என்ன? இராணுவ புலனாய்வு பிரிவு இந்த தாக்குதலை நடத்துவதற்கான உண்மையான நோக்கம் என்ன என்ற கேள்விகள் குறித்து விரிவாக ஆராய்ந்துள்ளோம்.
குற்றப்புலனாய்வுப் பிரிவின் தற்போதைய பணிப்பாளர் சானி அபேசேகர தொடர்பில் இந்த புத்தகத்தில் 11 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளேன். குண்டுத்தாக்குதல்களை நடத்துவதற்கு இவர் தான் அமைதியான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.பயங்கரவாதி சஹ்ரானை பிடிப்பதற்கு பொறுப்பாக இருந்தவர் இன்று குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை தேடுவது இயற்கை அடிப்படை கோட்பாடுகளுக்கு முற்றிலும் விரோதமானது.
குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் வனாத்தவில்லு பகுதியில் பெருந்தொகையான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சந்தர்ப்பத்தில் பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க ‘சஹ்ரானை பிடிப்பதற்கு தனக்கு மேலதிகமாக பொலிஸ் குழுக்கள் வேண்டும்’ என்று சானி அபேசேகரவிடம் வினவியுள்ளார்.ஆனால் சானி அபேசேகர அதற்கு அனுமதியளிக்கவில்லை. இந்த விடயம் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிடம் கேள்வியெழுப்பப்பட்ட போது ‘ நாட்டின் மதக் கலவரம் ஒன்று தோற்றம் பெறும் என்பதால் தான் அதற்கு அனுமதியளிக்கவில்லை.’என்று நீதியரசர்கள் முன்னிலையில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் 2018 மார்ச் மாதமளவில் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவு சஹ்ரானின் குருநாகல் வீட்டை சுற்றிவளைத்த போது குற்றப்புலனாய்வு பிரிவு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ‘ யாரை கேட்டு அங்கு சென்றீர்கள். அந்த விசாரணையை நாங்கள் தான் மேற்கொள்கிறோம்.உடனடியாக அங்கிருந்து வெளியேறுங்கள்| என்று குறிப்பிட்டுள்ளது. சானி அபேசேகர தான் இதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவனது குழுவினர் குண்டுத்தாக்குதல்களை சிறப்பாக நடத்துவதற்கு குற்றப்புலனாய்வு பிரிவின் தற்போதைய பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் திரைமறைவில் இருந்து செயற்பட்டுள்ளார்கள்.
குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்ற கேள்வி கடந்த 7 ஆண்டுகாலமாக தொடர்கிறது.இஸ்லாமிய அடிப்படைவாததத்தால் ஈர்க்கப்பட்ட மௌலவியான சஹ்ரான் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் நேரடியாக இணைவதற்கு பல்வேறு வழிகளில் முயற்சித்து, அவை தோல்வியடைந்த பின்னணியில் ஐ.எஸ்.ஸ்ரீ லங்கா என்ற அமைப்பை உருவாக்கி இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் ஈர்க்கப்பட்டவர்களையும்,மூளைச்சலவை செய்தவர்களையும் ஒன்றிணைத்து 2017 நவம்பர் மாதம் அநுராதபுரம் றம்பேவ காட்டுப்பகுதியில் சத்தியபிரமாணம் செய்து அந்த காணொளியை சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைமையகத்துக்கு மொஹமட் அரூஸ் ஊடாக அனுப்பி வைத்துள்ளார் .
2017 நவம்பர் முதல் 2018 டிசெம்பர் வரையான காலப்பகுதியில் பயங்கரவாதி சஹ்ரான் மற்றும் ரில்வான் ஆகியோர் சுமார் 300 பேருக்கு தற்கொலை குண்டுதாரிகளாக மாறுவதற்கு 5 பயிற்சி நிலையங்கள் ஊடாக பயிற்சியளித்துள்ளார்கள். இவர்கள் 2019 ஆகஸ்ட் மாதம் கண்டி ரந்தொலி பெரஹராவின் மீது தாக்குதல் நடத்தவே திட்டமிட்டிருந்தனர்.
இந்த காலப்பகுதியில் பயங்கரவாதி சஹ்ரானின் அணிக்குள் உள்ளக முரண்பாடுகள் தோற்றம் பெற்ற நிலையிலும், பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதையும் அறிந்தும், நியுசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பழிதீர்க்கும் வகையில் 2019.04.21 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்தினார்கள் என்றார்.
![]()