மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் இலங்கை மீது மீண்டும் புதிய அழுத்தங்கள்

இலங்கை இப்போது நெருக்கடியைக் கையாள்வதிலிருந்து பொருளாதார மீட்சியையும், வளர்ச்சியையும் நோக்கி நகர்ந்துவருகிறது. இருப்பினும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களின் விளைவாக எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள உயர்வு மற்றும் உலகளாவிய கட்டமைப்புக்களின் சேதங்கள் என்பன மீண்டும் புதிய அழுத்தங்களைத் தோற்றுவித்துள்ளன என ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்ததுல், முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் மற்றும் ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை நேரில் ஆராய்தல் ஆகிய நோக்கங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஸாட்டோ கன்டா 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை (23) நாட்டுக்கு வருகைதந்திருந்தார்.
இங்கு பல்வேறு சந்திப்புக்களிலும், களவிஜயங்களிலும் ஈடுபட்ட அவர், அது குறித்து மேலும் கூறியிருப்பதாவது:
இலங்கை இப்போது ஒரு நிலைமாற்றத்தில் இருக்கிறது. நெருக்கடியைக் கையாள்வதிலிருந்து மீட்சியையும், மீண்டெழும் தன்மை வாய்ந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதையும் நோக்கி நகர்ந்துவருகிறது. இருப்பினும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் மோதல்களின் விளைவாக எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள உயர்வு மற்றும் உலகளாவிய கட்டமைப்புக்களின் சேதங்கள் என்பன மீண்டும் புதிய அழுத்தங்களைத் தோற்றுவித்துள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான சந்திப்பின்போது இலங்கைக்கான 100 மில்லியன் டொலர் மேலதிக நிதியுதவி வழங்கலை உறுதிப்படுத்தினேன். இந்த உதவி வெளியக அழுத்தங்களில் இருந்து நாட்டின் பரந்துபட்ட பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்குப் பங்களிப்புச்செய்யும்.
அதேவேளை உட்கட்டமைப்பு, இணைப்புகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் சார்ந்த முதலீடுகளில் இலங்கைக்கான வருடாந்த உதவி வழங்கலை சுமார் ஒரு பில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.
அதேபோன்று நான் கேகாலை மாவட்டத்தில் ‘தித்வா’ சூறாவளியினால் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டேன். இவை சார்ந்த மீட்சிகள் முதலீடுகள் மற்றும் வளர்ச்சியை நோக்கி நிலைமாற்றமடையவேண்டும். முதலீடுகளை அடிப்படையாகக்கொண்ட நிலையான வளர்ச்சியை இலங்கை அடைந்துகொள்வதற்கு அவசியமான ஆதரவை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் என உறுதியளித்துள்ளார்.
![]()