எரிசக்தி நெருக்கடிக்கு அரசின் தீர்வு என்ன?; திட்டத்தை கூறுமாறு சஜித் வலியுறுத்து

நாட்டின் எரிசக்தித் துறையில் பெரும் நெருக்கடி உருவாகி வரும் நிலையில், எரிசக்தி நெருக்கடியை எவ்வாறு கையாளப் போகின்றோம் என்ற திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றும், இந்த நேரத்தில் மத்திய கிழக்கு போரை காரணமாக காட்டி பிரச்சினைகளிலிருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பு வாலுக்கராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த எரிசக்தி நெருக்கடிக்கு லக்விஜய நுரச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் போதுமான மின் உற்பத்தி இல்லாமையே முக்கிய காரணமாகும். தரம் குறைந்த நிலக்கரி பயன்பாடே இதற்கு காரணமாகும். நேற்றும் 168 மெகாவோட் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த தட்டுப்பாட்டை ஈடு செய்து கொள்வதற்கு டீசல் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படுவதால், மின்சாரக் கட்டணம் அதிகரித்து மக்களுக்கு அதிக சுமை ஏற்படுவதோடு, எரிபொருட்களுக்கான தட்டுப்பாடுகளும் நேர்கிறது.
மத்திய கிழக்கு போரால் பல சவால்கள் எழினும், அவற்றை குறைத்துக்கொள்வதற்கு வாய்ப்புகள் தோன்றும்போது அதற்காக முன்கூட்டியே திட்டமிடும் திறன் இருந்தும் அரசாங்கம் எந்த முன்கணிப்புகளையும் மேற்கொள்ளவில்லை. நாடாக எம்மால் எடுக்க முடியுமான முன்னாயத்த ஏற்பாடுகளை செய்திருக்கலாம்.
இப்போது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கே இந்த எரிசக்தி பாதுகாப்பின்மை காரணமாக அமைந்து காணப்படுகின்றன. இதனால் பல சவால்களும் எழுந்துள்ளன. தரம் குறைந்த நிலக்கரி பிரச்சினைக்கு அரசாங்கம் இன்னும் உரிய தீர்வுகளை முன்வைக்கவில்லை
நாட்டின் எரிபொருள் கையிருப்பு நிலை குறித்து அரசாங்கத்திற்கு தெளிவான கருத்தே இல்லை. எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் தொடர்ச்சியான மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பது குறித்தும் அரசாங்கம் சிந்திக்க வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
![]()