உலகம்

ஈரானுக்கு எதிரான போர் – படைகளை வலுப்படுத்தும் அமெரிக்கா

ஈரானுக்கு எதிராக போராடும் தனது படைகளை வலுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த நியூஸ்மேக்ஸ் செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க இராணுவப் படைகள் பல போர்க்கப்பல்களையும் 4,000 கடற்படை வீரர்களையும் அனுப்பத் தயாராகி வருவதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து அனுப்பப்படும் தாக்குதல் தயார்நிலைக் குழுவில், தரைவழிப் படையெடுப்புகளை மேற்கொள்ளப் பயன்படும் எஃப்-35 ரகப் போர் விமானங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் நீர்நில வாகனங்களும் அடங்கும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா சுமார் 2,500 கடற்படை வீரர்களையும், யுஎஸ்எஸ் திரிபோலி என்ற நீர்நிலத் தாக்குதல் கப்பலையும் மத்திய கிழக்குக்கு அனுப்பியதைத் தொடர்ந்து இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பெப்ரவரி 28ஆம் திகதி போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் 3,186 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 1,394 பேர் பொதுமக்கள் என்றும், அவர்களில் குறைந்தது 210 பேர் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 1,153 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறியுள்ள மனித உரிமைகள் அமைப்பு, 639 மரணங்களை உறுதிப்படுத்தவில்லை என்பதம் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *