இலங்கை

வசந்த முதலிகே கைது: பொலிஸார் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேயை 2022ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்து தடுத்து வைத்தமையானது, அவரது அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என இலங்கை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீதியரசர்களான சோபித ராஜகருணா, அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்மானத்தை அறிவித்தது.

2022 ஆகஸ்ட் 18 அன்று நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து வசந்த முதலிகே கைது செய்யப்பட்டார்.

எனினும், அவரைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்குத் தேவையான எந்தவொரு ‘நியாயமான சந்தேகத்தையும்’ உறுதிப்படுத்த பொலிஸார் தவறிவிட்டதாக நீதியரசர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதிய ஆதாரங்களை விசாரணை அதிகாரிகள் சமர்ப்பிக்கவில்லை என்றும் மன்று குறிப்பிட்டது.

இந்தக் கைது நடவடிக்கையின் மூலம் அரசியலமைப்பின் 12(1) மற்றும் 13(1) ஆகிய உறுப்புரைகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை, பேலியகொடை விசேட விசாரணைப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஜி.ஏ.கே. கமகே மீறியுள்ளார் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த மனுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மற்றும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *