மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர் ஈரான், இஸ்ரேல் தரப்புடன் அமைச்சர் விஜித பேச்சு

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றம் குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
மோதல்களைத் தவிர்த்து, பிராந்தியத்தில் அமைதியை மீண்டும் நிலைநாட்ட இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் இதன்போது வலியுறுத்தினார்.
இதேவேளை இஸ்ரேலில் வசிக்கும் 29,000 க்கும் மேற்பட்ட இலங்கை பிரஜைகளின் நலன் குறித்து, இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் உடன் நேற்று (05) தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை பிரஜைகளைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை எனத் தெரிவித்த அமைச்சர், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்த உறுதிமொழிகள் தமக்கு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்த உரையாடலின் போது, இராஜதந்திர ரீதியில் பிராந்திய அமைதியை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
இது குறித்து அமைச்சர் விஜித ஹேரத் தனது ‘எக்ஸ் ‘ தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“வெளிநாடுகளில் உள்ள எமது பிரஜைகளைப் பாதுகாப்பதே எமது முதன்மையான முன்னுரிமையாகும். இஸ்ரேலில் உள்ள 29,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் நலன் குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சாருடன் இன்று பேசினேன்.”
“அவர்களின் பாதுகாப்பு குறித்த உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டதுடன், இராஜதந்திர ரீதியாக பிராந்திய அமைதியை ஏற்படுத்த வேண்டியதன் அவசரத் தேவை குறித்தும் நாங்கள் கலந்துரையாடினோம்.”
![]()