பலதும் பத்தும்

கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

திருவிழாவுக்கு தேவையான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, இந்தியத் தூதரகம், நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் ஏனைய திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதுடன் நாளை சனிக்கிழமை காலை விசேட திருப்பலி பூசை நடைபெறவுள்ளது.

இந்த திருவிழாவில் கலந்துக்கொள்வதற்காக இலங்கை மற்றும் தமிழ் நாட்டிலிருந்து பெருமளவிலானோர் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திருவிழாவுக்காக வருகைத்தரும் அடியார்களுக்கு தேவையான உணவு , குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு கடற்படையினர் விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை அந்தப் பகுதியில் கடற்படையினரால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

அத்துடன் இலங்கையில் இருந்து இந்த திருவிழாவில் கலந்துகொள்பவர்களுக்காக விசேட படகு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி இன்று அதிகாலை 4.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் வரை அரச மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என்பதுடன் குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து கச்சத்தீவுக்கான படகுச் சேவைகள் இன்று காலை 5.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இடம்பெறும்.
குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணமாக ரூபா 1200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குழுவாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ படகுகளில் பயணிக்கும் பக்தர்கள், தமது முழுப்பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம், வயது, பால்நிலை மற்றும் படகு விபரங்களை (படகு இலக்கம், வகை, படகோட்டியின் பெயர் மற்றும் தொடர்பு இலக்கம்) இரு பிரதிகளில் கொண்டு வருவது கட்டாயமாகும்.

வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப் படகுகளில் வருவோர், தத்தமது பிரதேச கடற்படை முகாம்களில் பயணப் பாதுகாப்பு அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு முன்னதாக கச்சத்தீவை வந்தடைய வேண்டும்.
விழாவில் கலந்துகொள்ளும் யாத்திரிகர்களுக்கு நாளை காலை உணவு மட்டும் வழங்கப்படும். ஏனைய நேரங்களுக்கான உணவை யாத்திரிகர்கள் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

கச்சத்தீவுப் பகுதியில் உணவுகளைச் சமைப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
கச்சத்தீவு புனித பூமியாகக் கருதப்படுவதால், அங்கு மதுபானம் கொண்டு செல்வது, அருந்துவது மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *