இலங்கை

நாமலிடம் நேருக்கு நேர் கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள்: சரத் வீரசேகர விளாசல்

நாமலை நேருக்கு நேர் சந்தித்து கேள்வி கேட்கும் தைரியம் தமிழ் மாணவர் அமைப்புகளுக்கு இல்லை எனவும், அவரது ஆளுமையைக் கண்டு அவர்கள் அஞ்சுவதாகவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் உரை நிகழ்த்த நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தமிழ் மாணவர் அமைப்புகளின் அழுத்தத்தால் அது இரத்து செய்யப்பட்டுள்ளது.

பேச்சு சுதந்திரம் மற்றும் விவாத சுதந்திரத்தைப் போற்றும் இந்தப் பல்கலைக்கழகங்கள், பிரிவினைவாத தமிழ் மாணவர் அமைப்புகளுக்கு பணிந்து அந்த கலாசாரத்தையே காட்டிக்கொடுத்துள்ளன.

நாமல் ராஜபக்சவின் ஆளுமைக்கு முன்னால் முதுகெலும்பை நிமிர்த்தி நின்று கேள்வி கேட்க முடியாத தமிழ் மாணவர் சங்கங்களே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

இந்த அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை திருப்திப்படுத்தவே செயற்படுகிறது. அதனால்தான் ஜனாதிபதி ‘ரணவிரு’ (இராணுவ வீரர்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூட அஞ்சுகின்றார்.. சுதந்திர தினத்தில் இராணுவக் கருவிகளைக் காட்சிப்படுத்தாததும் இவர்களைத் திருப்திப்படுத்துதற்காகவே ஆகும்.

2010 இல் மஹிந்த ராஜபக்சவுக்கும் இவ்வாறே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. உலகின் மிகக் கொடிய பயங்கரவாதத்தை தோற்கடித்து, ஈழக் கனவைத் தகர்த்ததால் ராஜபக்ச குடும்பத்தின் மீது அவர்கள் தீராத கோபத்தில் உள்ளனர்.

தமிழ் மாணவர் சங்கங்கள் நாமல் ராஜபக்சவிடம் கேள்வி கேட்க தைரியம் இல்லாமல் போனது குறித்து வெட்கப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *