பலதும் பத்தும்

பிரதமர் மோடிக்கு ‘நெசெட் சபாநாயகர் பதக்கம்’

இஸ்ரேல் நாட்டிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் நாடாளுமன்றமான ‘நெசெட்’ (Knesset) உயரிய கௌரவத்தை வழங்கியுள்ளது. நேற்று மாலை இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் நாடாளுமன்றச் சபாநாயகர் அமீர் ஒகானா, ‘நெசெட் சபாநாயகர்’ (Speaker of the Knesset Medal) பதக்கத்தை வழங்கிச் சிறப்பித்தார்.

 

 

மோடி இஸ்ரேல்

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் இந்த உயரிய பதக்கத்தைப் பெறும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது உரையின்போது, 2023-ல் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்த பிரதமர், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கும் என்று தெரிவித்தார். காசா அமைதித் திட்டத்தை இந்தியா ஆதரிப்பதாகவும், பிராந்தியத்தில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தையே வழி என்றும் அவர் வலியுறுத்தினார்.

விஞ்ஞானம், தொழில்நுட்பம், விவசாயம், நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், பிரதமர் மோடியின் இந்த இஸ்ரேல் பயணம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *