முச்சந்தி

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்த சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் இலங்கை வருகை

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ‘ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ்,  (24.02.2026) மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

உலங்குவானூர்தி மூலம் பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் மற்றும் அவரது சிறப்புத் தூதுக்குழுவினர், அங்கிருந்து யாழ்ப்பாணம் நகரிலுள்ள தனியார் விடுதிக்குச் சென்றனர். அங்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பளித்தனர்.

இதன்போது, சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ்ஜுக்கு பொன்னாடை போர்த்தி ஆளுநர், வடக்கு மாகாண சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் விசேடமாக வெளியிடப்பட்ட ‘சிவன் யாத்திரைப் பாதை’ மற்றும் ‘இராமாயண யாத்திரைப் பாதை’ ஆகிய நூல்களையும் வழங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்துக்குச் சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘சிவ யாத்திரைப் பாதையில்’ உள்ளடங்கும் முக்கிய ஆலயங்களில் ஒன்றாக கீரிமலை நகுலேஸ்வரம் விளங்குவதுடன், ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்ட ‘சிவன் யாத்திரை பாதை’ நூலிலும் இவ்வாலயத்தின் சிறப்புகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகப் புகழ்பெற்ற 2025ஆம் ஆண்டு மகா கும்பமேளாவின் தலைமை அமைப்பாளராகச் செயற்பட்ட சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜின் இந்தப் பயணமானது, இலங்கையின் இராமாயண மற்றும் சிவ யாத்திரைப் பாதைகளை மையப்படுத்திய ஆன்மீகச் சுற்றுலாவை உலகளாவிய ரீதியில் மேம்படுத்துவதற்கும், இந்தியாவிலிருந்து அதிகளவான பக்தர்களை இலங்கையை நோக்கி ஈர்ப்பதற்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *