முச்சந்தி

வங்கதேச இந்துக்கள் மீதான வன்முறை! டாக்காவில் புதிய அரசும் – இந்திய உறவும்…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில் புதிய அரசு பதவியேற்ற பின்னர் இந்து மக்களின் உணர்வுகளை மதித்து நம்பிக்கையை பெறுமா என்பது எதிர்வரும் நாட்களில் தெரியவரும்)
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு ஆகஸ்ட் 2024 கவிழ்ந்த பிறகு இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், கோவில் சூறையாடல்கள் அதிகரித்துள்ளதால், தங்களின் உரிமைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் வங்கதேச இந்துக்கள் போராட முடிவு செய்துள்ளனர்.
இந்துக்கள் மீது தாக்குதல்:
வங்கதேசத்தின் இந்து மக்கள் தங்கள் உரிமைக்காக போராட முடிவு செய்தால் அவர்களுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள இந்துக்கள் நிச்சயம் உதவுவார்கள் என இந்திய ஆர்எஸ்எஸ் (RSS) தலைவர் மோகன் பாகவத் அண்மையில் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் அடுத்தடுத்து தொழிலதிபர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என பலர் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த நாடு முழுவதும் இந்த போக்கு இன்னும் நீடிக்கிறது. இந்த சூழலில் வங்கதேசத்தில் நெருக்கடி நிலையில் இந்துக்கள் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டாக்காவில் இந்து மக்களின் வீடுகள், கோவில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான தொடர் தாக்குதல்கள், நில அபகரிப்பு, மற்றும் மதத் தலைவர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் தொடரப்படுவதற்கு எதிராக நடைபெறுகின்றன.
இதனால் அங்கு வாழும் இந்து மக்கள் சிறுபான்மையினர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும், மற்றும் சிறுபான்மையினருக்கு நாடாளுமன்றத்தில் 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
வங்கதேசத்தில் சுமார் 1.25 கோடி இந்துக்கள் உள்ளனர். அவர்கள் அங்கு இருக்கவும், தங்கள் உரிமைக்காக போராடவும் முடிவு செய்தால் உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் அவர்களுக்கு உதவுவார்கள், இந்திய நாட்டின் இந்து மக்கள் இந்த விவகாரத்தில் இப்போது கவனம் செலுத்தி வேண்டும் என கூறப்படுகிறது.
வங்க தேசத்தில் இஸ்கான் (ISKCON) தலைவர் நவம்பர் 2024இல் கைது செய்யப்பட்டார். இந்துக்களின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி என்ற இஸ்கான் தலைவர் கைது செய்யப்பட்டது வங்கதேசத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் தங்கள் உரிமைக்காக போராட முடிவு செய்தால், உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் அவர்களுக்கு ஆதரவாக உதவுவார்கள் என பல இந்திய அரசியல் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
வங்கத்தில் இந்திய எதிர் உணர்வு:
வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு என்பது புதிய விஷயமல்ல. வங்கதேசத்தின் பல கட்சியினர், ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சியில் தங்கள் நாட்டின் மீது இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகக் கருதி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த 2024ம்ஆண்டு மக்கள் எழுச்சியால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு இந்த எதிர்ப்பு மேலும் அதிகரித்தது.
இதனை தொடர்ந்து ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்ததில் இருந்தும், அவரைத் திருப்பி அனுப்புமாறு வங்கதேசம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இந்தியா இதுவரை அதற்குச் சம்மதிக்காததாலும் இந்தக் கோபம் மேலும் அதிகரித்துள்ளது. 2025 டிசம்பரில் வங்க மாணவர் தலைவர் ஹாதியின் கொலைக்குப் பிறகு, வங்கதேசத்தின் சில இளம் தலைவர்கள் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை கடுமையாக தெரிவித்து வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் டாக்காவிலுள்ள இந்திய தூதரகத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை வங்கதேச பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்த வேண்டியிருந்தது. சிட்டகாங்கில் உள்ள இந்திய துணைத் தூதரக கட்டடத்தின் மீது ஒரு கும்பல் கல்வீச்சு நடத்தியது. இது இந்தியாயை கடுமையாக அதிருப்தி அடையச் செய்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக 12 பேரை வங்கதேச காவல்துறை கைது செய்தது. ஆனால் பின்னர் அவர்கள் எந்தக் குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்கப்பட்டனர்.
இந்தியாவிலும் இதற்குப் போட்டியாகப் போராட்டங்கள் நடந்தன. டெல்லியில் உள்ள வங்க தேச தூதரகத்திற்கு வெளியே இந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்திற்கு வங்கதேசம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இந்த போராட்டம் நியாயமற்றது என்றும் கூறியது.
இரு நாட்டு அரசியல் தலைமைகள் இடையே இத்தகைய சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் இதற்கு முன் பார்த்ததில்லை என்று முன்னாள் வங்கதேச தூதர் ஹுமாயூன் கபீர் கூறியுள்ளமை கவனிக்கத்தக்கது. இரு நாடுகளும் சர்வதேச நடைமுறைகளின்படி தூதரகங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்களின் நிலையானது அவர்கள் வாழ்க்கை முக்கியமல்ல்என்பது போல மாறியுள்ளதாக அச்சம் தெரிவிக்கும் போராட்டக்காரர்கள், தங்கள் உரிமைகள் நிலைநாட்டப்படும் வரை போராட்டம் தொடரும் என்கின்றனர். இந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, வங்கதேச இந்து மீட்புக் குழு மற்றும் சனாதன் ஜாக்ரன் மஞ்ச் போன்ற அமைப்புகள் போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகின்றன.
இடைக்கால அரசு மீதான கண்டனம்:
சமீபத்திய வன்முறைகளைத் தடுக்கத் தவறியதற்காக வங்கதேச இடைக்கால அரசாங்கத்தை பல சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். போராட்டங்களுக்கு முன்பே, அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் முடிவுகளை எடுக்கவும் இடைக்கால அரசு தடுமாறியதால், அது விமர்சனங்களுக்கு ஆளானது.
இரு தரப்பிலும் உள்ள வலதுசாரி தலைவர்கள் தங்களின் நலனுக்காக மக்களைத் தூண்டும் விதமான அறிக்கைகளை வெளியிட்டு பதற்றத்தையும் பொதுமக்களின் கோபத்தையும் தூண்டுவதாக கூறுகின்றனர். இந்திய ஊடகங்களில் ஒரு பெரும் பகுதி, வங்கதேச நிகழ்வுகளை மிகைப்படுத்திக் காட்டுகின்றன. அந்த நாடு மதவாத குழப்பத்தில் மூழ்கி வருவதாகச் சித்தரிக்கின்றன.
கடந்த வருட இறுதியில் டாக்காவில் டிசம்பர் 19 அன்று ஷெரீஃப் உஸ்மான் ஹாதியின் மரணத்திற்குப் பிறகு நடந்த போராட்டத்தின் போது, இந்து மக்கள் மீது தாக்குதலை போராட்டக்காரர் நடாத்தினர். இதனால் கலவரம் வெடித்தது.
இந்திய அரசு உடனடியாக தலையிட்டு இருக்க வேண்டும் என்று பல இந்திய அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர். வங்கதேசத்தின் ஸ்திரத்தன்மை இந்தியாவின் பாதுகாப்பிற்கு, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களுக்கு மிக முக்கியமானது என்பதை இந்திய அரசு உணர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
தற்போதைய தேர்தல் பெப்ரவரி 12இல் நடைபெறும் வரை வங்கதேசத்தின் இடைக்கால அரசு, அதன் கட்டுப்பாடு மற்றும் அதிகாரம் குறித்து விமர்சனங்களை எதிர்கொண்டது. வங்கதேசத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களை எதிர்கொள்ள முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கமே சிறந்ததாக இருக்கும் என்று பரவலான கருத்து நிலவியது. ஆனால் தற்போது தேர்தல் முடிவடைந்த நிலையில் புதிய அரசு பதவியேற்ற பின்னர் இந்து மக்களின் உணர்வுகளை மதித்து நம்பிக்கையை பெறுமா என்பதை எதிர்வரும் நாட்களில் தெரியவரும்.
கடந்த வாரம் பிப்ரவரி 12ஆம் தேதி வங்கதேசத்தில் தேர்தல் நடைபெற்றது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்ட நிலையில், வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) பாரிய வெற்றியை பெறறது. ஆனால் தேர்தலின் பின்னர் எதிர்காலத்தில் எதிர்கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அரசியல் கட்சிகள் பிஎன்பி அரசுக்கு பாரிய சவாலாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் தீவிர மதவாதக் கட்சிகள் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளைப் பயன்படுத்துவதால் வரும் நாட்களில் மேலும் வன்முறை ஏற்படக்கூடும் என்ற கவலை உள்ளது. இந்தியாவுக்கு எதிரான இத்தகைய அரசியலால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியா அல்ல, வங்கதேச குடிமக்கள்தான் என்பதை பலரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். குறிப்பாக மதச்சார்பற்ற சிந்தனை கொண்டவர்கள், நடுநிலையாளர்கள் மற்றும் சிறுபான்மையின தலைவர்கள் வங்கதேச மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *