முச்சந்தி
நான்காவது ஆண்டில் உக்ரைன் போர்: பேச்சுவார்த்தை இழுபறியும் தோல்விகளும்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(எதிர் வரும் ஜூன் மாதத்தில் போர் நிறுத்தத்துக்கு உடன்பட உக்ரைனை வலியுறுத்தும் அமெரிக்கா அதன் பின்னர், தொடர்ந்து போருக்கான ஆயுத- நிதி உதவிகளை வழங்குமா என்பது சந்தேகமே. அதேவேளை ரஷ்யாவுடனான போரில் 55 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலி என அறிவிக்கப்பட்டுள்ளது.இறுதியான சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகும்வரை எவ்வளவு தூரம் உக்ரைன் நிலத்தை கைப்பற்ற முடியுமோ, அதுவே ரஷ்யாவின் குறிக்கோளாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் தற்போது நான்காவது ஆண்டை கடந்துள்ளது)
உக்ரைன் போர் நான்காம் ஆண்டை நெருங்கும் நிலையில், உலக நாடுகள் மேலும் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ரஷ்யா சமாதான பேச்சுவார்த்தைகளிலும் பங்கெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போரையும் தீவிரமாக நடத்திக்கொண்டு, அமைதி பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்பதே ரஷ்யாவின் நோக்கமாக தொடர்கிறது. ஆனாலும் எஞ்சியிருக்கும் முக்கிய பிராந்தியங்களை விட்டுத்தருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது உக்ரைன்.
அதேவேளை சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் பிணைக்கைதிகள் விடுதலையைத் தவிர வேறெதுவும் நடக்கவில்லை. ஆனால் அமெரிக்கா வரும் ஜூன் மாதத்தில் போர் நிறுத்தத்துக்கு உடன்பட உக்ரைனை வலியுறுத்தி வருகிறது.
பேச்சுவார்த்தை இழுபறி:
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போர், இரு தரப்பிலும் பெரும் அழிவையும் இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் அதிபர் விலோடிமிர் ஜெலன்ஸ்கி பலமுறை போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போதிலும், ரஷ்யா போரை நிறுத்த சிறிதும் ஆர்வம் காட்டவில்லை என்று மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆரம்பகட்ட அழுத்தத்தின் காரணமாக, ரஷ்யா உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தும், போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை. போரை முடிவுக்கு கொண்டுவர ஜெலென்ஸ்கி விடுத்துள்ள வேண்டுகோளை ரஷ்யா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
ஆனாலும் இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையிலும், ரஷ்யா தனது ராணுவ தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இடைவிடாது
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியும் வருகிறது.
தொடரும் தாக்குதலைத் தொடர்ந்து, போர் நிறுத்தத்தை அடைய ரஷ்யா மீது சர்வதேச சமூகம் மேலும் அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி தனது வேண்டுகோளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார்.

தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருவதாகவும், ரஷ்யா போர் நிறுத்தத்தை நிராகரித்து, போரையே தேர்ந்தெடுத்துள்ளது என்பதை உலகிற்கு நினைவூட்டுகிறது என்று ஜெலன்ஸ்கி மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் போரின் உண்மையான விலையை ரஷ்யா உணர அழுத்தம் கொடுக்க ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூனில் போரை முடிக்க அமெரிக்க உத்தரவு:
எதிர்வரும் ஜூன் மாதத்தில் போரை முடிக்க அமெரிக்க அதிபர் உக்ரேனிய அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனாலும் போரை நிறுத்தி விடுவார்கள் என்ற நம்பிக்கை எவருக்கும் இல்லை என்பதே உண்மையாகும். 24 பெப்ரவரி 2022 அன்று தொடங்கிய போரை வருகிற ஜூன் மாதத்துக்குள் முடித்தால் போதும் என்று அமெரிக்கா கூறியுள்ளதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்றுக் கொள்வாரா என்று இதுவரை தெரிவிக்கவில்லை.
2022இன் பின்னர் உக்ரைனின் நான்கு புதிய பிராந்தியங்களை இப்போரின் மூலம் ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இப்போது இன்னும் இரண்டு பிராந்தியங்களான கார்கீவ், சுமியைக் கைப்பற்ற ரஷ்யா குறிவைத்துள்ளது. இவை இரண்டும் ரஷ்யாவோடு உக்ரைன் கொண்டிருக்கும் கிழக்கு எல்லை பிராந்தியங்கள் ஆகும்.
தலைநகர் கீவ்வுக்குப் பிறகு உக்ரைனின் அடுத்த பெரிய நகரம் கார்கீவ். தற்போது இவற்றின் எல்லைப்புற கிராமங்களில் முன்னேறி வருகிறது ரஷ்யப்படைகள். கிராமம் கிராமமாக முன்னேறி பல நகரங்களையும் கைப்பற்றி உள்ளது ரஷ்யாவின் படைகள். இறுதியான சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகும்வரை எவ்வளவு தூரம் உக்ரைன் நிலத்தை கைப்பற்ற முடியுமோ, அதுவே ரஷ்யாவின் குறிக்கோளாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
55 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலி
ரஷ்யாவுடனான போரில் 55 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலி என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா
தொடரும் தாக்குதல்களால் கீவ்வில் உள்ள பல கல்லறைகளும் சேதமடைந்துள்ளன. போரின் முடிவில் உக்ரைனிய எல்லைகளோடு கல்லறைகளும் மாற்றம் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலன்ஸ்கி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் இதுவரை சுமார் 55 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்.

நீண்ட காலமாக இப்போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உலகின் பல நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய படைகள் பலமுறை இரசாயனப் பொருட்களை பயன்படுத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளன. தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் உக்ரைனிய போர்க்களங்களில் 9,000 முறை பயன்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனிய அதிகாரிகள் மற்றும் ஐரோப்பிய உளவுத்துறை தகவல்களின்படி, CS, CN போன்ற நச்சு கட்டுப்பாட்டு வாயுக்கள் கையெறி குண்டுகள் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிகிறது.
முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட குளோரேபிக்ரின் (Chloropicrin) இந்த போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளன என கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் பதுங்கு அகழிகளில் மறைந்திருக்கும் வீரர்களை வெளியேற்ற (Drone) டிரோன்கள் மூலம் நச்சு வாயுக்கள் செலுத்தப்படுகின்றது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச போர் ஆய்வுகள் மையம் உக்ரைனிய போர்க்களத்தில் நச்சுப் பொருட்களின் இருப்பை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், பெருமளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அளவிலான பயன்பாடு இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
ஆனாலும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, 2022 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 லட்சம் பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச போர் ஆய்வுகள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தப் போரில் ரஷ்யா தரப்பில் சுமார் 3.25 லட்சம் பேரும், உக்ரைன் தரப்பில் சுமார் 1.4 லட்சம் பேரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் எதிர்ப்புத் திறன்:
இந்த போரின் பின்னர் ரஷ்யா ஆயுத ஏற்றுமதி உயர்வு பாரியளவில் அதிகரித்துள்ளது. ரஷ்யாவை தனிமைப்படுத்தி 15 பில்லியன் டாலர் அளவுக்கு இராணுவ வர்த்தகம் செய்துள்ளது. 2025இல், மேற்கத்திய தடைகளை மீறி, ரஷ்யா 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 15 பில்லியன் மதிப்பிலான இராணுவ உபகரணங்கள் ஏற்றுமதி செய்ததாக அதிபர் புட்டின் அறிவித்துள்ளார்.போரின் பின்னர் ரஷ்யா உலகளவில் தனிமைப்படுத்தப் படவில்லை என்பதற்கு சான்றாக, தனது ஆயுத தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. மேலும் ரஷ்யாவின் அதிவேக ஏவுகணையான ‘ஓர்சேனிக்’ (Oreshnik) வளர்ச்சியானது ஐரோப்பாவுக்கான நேரடி எச்சரிக்கையாக கருதப்படுகிறது. இதுவே நேட்டோவுக்கு அனுப்பப்பட்ட பலத்த எச்சரிக்கை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலந்து எல்லைக்கு மிக அருகில், லூவோவ் நகரம் அருகே, ரஷ்யா அதிவேக ஓர்சேனிக் ஏவுகணைகளை அண்மையில் பயன்படுத்தியுள்ளது. இவை இருபது நிமிடங்களுக்குள் ஐரோப்பிய தலைநகரங்களை அடையும் திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது.
இதில் சீன தயாரிப்பு உதிரி பாகங்களும் பலவும் (Chinese-made industrial machinery) பயன்படுத்தப்பட்டதாக வரும் தகவல்கள், ரஷ்யாவின் ஆயுதத் திட்டத்திற்கு சீனாவும் முழுமையாக ஆதரவு அளித்து வருவதை வெளிப்படுத்தி இருக்கிறது.
![]()