இலங்கை

தோல்விகளை மறைக்க ராஜபக்ஷக்கள் மீது பழி போடாதீர்கள்

இலங்கையில் அதிகரித்துள்ள பாதாள உலகக் குழுக்களின் அட்டூழியங்களையும், போதைப்பொருள் மாபியாக்களையும் கட்டுப்படுத்த முடியாத அநுர அரசு, தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்க ராஜபக்ஷக்கள் மீது வீண் பழி சுமத்துகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சாடியுள்ளது.

நாட்டில் பாதாள உலகக் குழுக்களும், போதைப்பொருள் மாபியாக்களும் விஸ்வரூபம் எடுக்க ராஜபக்ஷக்களின் ஆட்சியே காரணம் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே மொட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ஊடகங்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

“நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை மறைக்க முடியாது. ஒவ்வொரு முறையும் தங்களால் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியாதபோது, கடந்த கால ஆட்சியாளர்களைக் கைகாட்டுவது தற்போதைய அமைச்சர்களின் வாடிக்கையாகிவிட்டது. ராஜபக்ஷக்களின் ஆட்சிக்காலத்தில் பாதாள உலகக் குழுக்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டன என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.” – என்றும் அவர் தெரிவித்தார்.

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணாயக்காரவின் கருத்துக்கள் வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவை எனச் சுட்டிக்காட்டிய சாகர காரியவசம், “பாதாள உலகத்தினரைக் கைது செய்வதற்குப் பதிலாக, அரசியல் ரீதியாக எங்களைப் பலவீனப்படுத்தவே அரசு முயற்சி செய்கின்றது.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெறும் வாய்ச்சவடால்களால் மாத்திரம் பாதாள உலகத்தை ஒழிக்க முடியாது என்றும், அதற்குத் தேவையான ஆளுமையும் திட்டமிடலும் இந்த அரசிடம் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

“முன்னாள் ஆட்சியாளர்கள் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு, வீதிகளில் சுட்டுக் கொல்லப்படும் மக்களின் பாதுகாப்பை முதலில் உறுதிப்படுத்துங்கள்.” – என்றும் அவர் பகிரங்க சவால் விடுத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *