இலங்கை

புலம்பெயர் தமிழரின் கடும் எதிர்ப்பால் நாமலின் கேம்பிரிட்ஜ் பல்கலை. உரை ரத்து; உரையாற்றுவோர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கம்

புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ்மக்களின் கடும் எதிர்ப்பால் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருந்த நாமல் ராஜபக்சவின் உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதம்-25 ஆம் திகதி உரையாற்ற வருகை தருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ரத்துச் செய்து உரையாற்றுவோர் பட்டியலிலிருந்து அவரைப் பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது.

புகழ்பூத்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உரை எதிர்வரும்-25 ஆம் திகதி இடம்பெறவிருந்த நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் புலம்பெயர் வாழ் ஈழத் தமிழ்மக்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அனுப்பிய ஏராளமான மின்னஞ்சல்களைக் கருத்திற் கொண்டே அவரது உரை திடீரென ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற மற்றொரு பல்கலைக்கழகமான பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் எதிர்வரும்-25 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை உரையாற்ற வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிராகவும் தற்போது புலம்பெயர் ஈழத் தமிழ்மக்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

இதேவேளை, பிரித்தானியாவின் 20 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர் சங்கங்கள் மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பை உடனடியாக ரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பின் மூலம் பிரித்தானியத் தமிழ் சமூகத்திற்கும், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமதிப்புக்காக ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் சங்கங்கள் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். யுத்தக் குற்றங்கள், இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள நபர்களுக்கு மேடை வழங்காத கொள்கையைப் பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டும்.

ராஜபக்ச குடும்பத்தினர் முன்னெடுத்த போரால் இடம்பெற்றதாகக் கூறப்படும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் வன்முறைகள் மற்றும் ஆள் கடத்தல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தப்பிக்க முடியாது. அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல அந்த இனப்படுகொலை இயந்திரத்தின் வாரிசு மற்றும் பாதுகாவலர் எனவும் குறித்த அறிக்கையில் மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *