பாதாள உலகின் பின்னால் இருக்கும் அரச தலைவர் யார்?; எவரது அலுவலகம் அவர்களை நிர்வகிக்கிறது?

நாட்டில் செயற்படும் ஒருங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்கள் சிலவற்றின் பின்னால் அரசாங்கம் இருக்கின்றது என்றும், அந்த குழுக்கள் பெலவத்த அலுவலகத்தில் இருந்தா? ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தா? அல்லது பிரதமர் அலுவலகத்தில் இருந்தா? நிர்வாகிக்கப்படுகின்றது என்று தெரியவில்லை எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது நாமல் மேலும் தெரிவிக்கையில்,
விவசாயிகளை பலப்படுத்தி நாட்டு மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதாக கூறியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் விவசாயிகள், மீனவர்களை பலப்படுத்தாமல் வெளிநாட்டில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து வர்த்தகர்களை பலப்பபடுத்துவதையே அரசாங்கம் செய்கின்றது. இப்போது வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது. ஒரு பேனையில் அரிசி மாபியாவை இல்லாமல் செய்வதாக கூறினர். ஆனால் இப்போது நடப்பது வேறு. டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை. வீடுகள் வழங்கப்படவில்லை. 100 இலட்சம் ரூபா வழங்குவதாக கூறினர். பொய்யை பாராளுமன்றத்திற்குள் கூறினர்.
நீங்கள் விவசாயிகள், மீனவர்களை பாதுகாக்காமல், உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் இந்த அரசாங்கத்தால் பயணிக்க முடியாது. ரில்லியன் ரூபா நிதி கையிருப்பில் இருப்பதாக கூறினர். அதில் நஷ்ட ஈட்டை வழங்குவதாகவும் கூறினர். ஆனால் வழங்கிய காசோலைகள் திரும்பி வருகின்றன. நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய பாதுகாப்பு தொடர்பில் கதைக்கின்றீர்கள். யுத்தக் காலத்திலும் இங்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்துள்ளன. ஆனால் நீங்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறும் நிலையில் உங்கள் கட்சி தலைமையகத்திற்கு அருகில் இராணுவ தலைமையகத்திற்கு அருகில் பாதுகாப்பு பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடக்கின்றது. ஆனால் அரசாங்கத்தின் பதில் என்ன? சட்டத்தரணி கொல்லப்பட்ட பின்னர் திட்டமிட்ட குற்றக்கும்பல் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணியென்று அரசாங்கம் பதிலளிக்கின்றது. அப்படியென்றால் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார சட்டத்தரணியே. அவரின் சேவையாளர்கள் யார்? அவரும் திட்டமிட்ட குற்றக்கும்பலுடன் பழகியுள்ளாரே. அது அவர்களின் தொழில்சார் கடமையே. இவ்வாறான நிலைமையில் சட்டத்தரணி கொல்லப்படும் போது அந்த கொலையை ஒருங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் மீது சுமத்தி நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.
அதாவது சில ஒருங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல்களின் பின்னால் அரசாங்கம் இருக்கின்றது என்பது தெளிவானது. அது பெலவத்த அலுவலகத்தில் இருந்தா? ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தா? பிரதமர் அலுவலகத்தில் இருந்து நிர்வாகிக்கப்படுகின்றதா? என்று எமக்கு தெரியாது.
பிரதமர் மன்னார் சென்றிருந்தார். யுத்தம் தங்களிடம் கேட்டு செய்யவில்லை என்று கூறியுள்ளார். 88/89 காலத்தில் நடந்த சம்பவங்கள் கேட்டா செய்யப்பட்டது. யுத்தம் ஒன்று இருந்தது. பயங்கரவாதமும் இருந்தது. இப்போது அவை இல்லை. இந்த நேரத்தில் அங்குள்ள மக்களின் மனநிலையுடன் விளையாடுவது நியாயமற்றது. உங்களால் இராணுவ வீரரை வீரர் என்று கூற முடியவில்லை. ஆனால் வேலை நிறுத்தத்தில் இராணுவத்தை பயன்படுத்த முடியும். அவசர நிலைமைகளில் அவர்களிடமே ஓடி போக வேண்டியுள்ளது. எனினும் அவர்களுக்கு உரிய கௌரவத்தை வழங்க முடியவில்லை. அச்சுறுத்தல் விடுத்து அரசாங்கத்தை கொண்டு செல்லவே முயற்சிக்கின்றீர்கள். போராட்ட காலத்தில் உட்சாகப்படுத்தி இப்போது 12 பேர் தூக்கு மேடைக்கு போயுள்ளனர். இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துங்கள். நாட்டில் தலைதூக்கியுள்ள பாதாள குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என்று கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
![]()