ரணிலின் மைத்திரியை விசாரணைக்கு அழைப்பு!; சமனுக்குப் பிணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்க அவர்களுக்கு, நாளை 20ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சமன் பிணையில் விடுதலை
இதேவேளை, 2023ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயத்திற்காக நிதி அனுமதி வழங்கியதன் மூலம், அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவர் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 20 மில்லியன் ரூபா பெறுமதியான தலா இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் அனுமதியளித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வெளிநாட்டு விஜயம் ஒன்றிற்காக நிதி அனுமதி வழங்கியதன் மூலம், அந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அவரை நேற்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 11ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()