அரசினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிக கொடூரமானது!

இலங்கையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட தற்போது அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA ) மிக கொடூரமானது. இச்சட்டம் சர்வதேச உரிமை சட்டங்களுக்கு ஏற்ப அமையவில்லை, மக்களை அடக்குவதற்கும் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கும் வசதியாக வரையப்பட்டுள்ளது என மனித உரிமை ஆர்வலரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசினால் அமுல்படுத்தவென முன்மொழியப்பட்ட அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் தொடர்பில், செவ்வாய்கிழமை விழுது நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது.
இதன்போது வடக்கு, கிழக்கு, மாகாண ஊடகவியலாளர்கள், மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர்கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாப்பதற்காக வரவுள்ள இப் புதிய சட்டம் மிக மோசமானது. இது சர்வதேச உரிமை சட்டங்களுக்கு ஏற்ப அமையவில்லை. அதில் இருக்கும் பயங்கரவாதம் பற்றிய வரைவிலக்கணம் மிகவும் பரந்ததாக உள்ளதால் நபர் ஒருவர் எந்த குற்றம் செய்தாலும் அரசு அவரை கைது செய்யலாம்.
தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்து ஒரு வருடத்தின் பின் வழக்கு தொடுக்க விட்டாலும் கூட அவரை பிணையில் விடுவிக்கலாம். வரவுள்ள புதிய வரைபு சட்டம் ஒருவரை ஒரு வருடம் தடுப்பாணையில் தடுத்து வைக்கப்படலாம். மற்றும் தடுப்பு காவலில் வைக்கப்படலாம், ஆகையால் இரண்டு வருடங்களுக்கு பின்புதான் ஒருவரை பிணையில் விடுதலை செய்யலாம் என கூறுகின்றது.
இராணுவ மயமாக்கல் இராணுவத்திற்கு பொலிஸாரின் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது கைது செய்வதற்காக தேடுதல் நடவடிக்கைக்கான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் இராணுவம் பொலிஸாரின் கடமையை செய்யக்கூடாது. என கூறப்படுகின்றது.
அதுபோல் ஜனாதிபதியின் அதிகாரத்த அதிகரிக்கின்றது. மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் பல அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் சாதாரண சில காரணங்களுக்காக சிவில் அமைப்புக்கள்கூட தடை செய்யப்படலாம். இது தவிர, நீதித் துறையில் இருக்கும் பல அதிகாரங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. நீதிபதியின் அதிகாரங்கள் சில பொலிஸாருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றதை காண முடிகிறது.
ஆகையால் இந்த சட்டமூலம் அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாப்பதை விட மக்களின் ஜனநாயக உரிமையினை இல்லாதொழிக்கின்றது என்று தான் கூற வேண்டும் என தெரிவித்தார்,
![]()