இலங்கை

பாதாளக் குழுக்களின் உதவியுடன் நாட்டை ஆளச் சூழ்ச்சி வன்முறைகளின் பின்னணியில் அரசு!; ஊடகவியலாளர்களுக்கும் உயிர் அச்சுறுத்தல் வரலாம்

அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்பை ஒருபுறம் பலவீனப்படுத்திக்கொண்டு ,மறுபுறத்தால் புத்தசாசனத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. விமர்சனங்கள் மற்றும் குறைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இந்த அரசாங்கத்துக்கு கிடையாது என்பதனால் விரைவில் ஊடகவியலாளர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எச்சரித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு எச்சரித்துள்ள அவர் மேலும் கூறுகையில்,

ஜே .வி.பி.யின் வன்முறை, கலவரம் மற்றும் 30 வருடகால சிவில் யுத்தத்தால் நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த காலப்பகுதியில் நாட்டு மக்கள் மத்தியில் தேசிய பாதுகாப்பு குறித்து பெரியதொரு அச்சநிலை இருக்கவில்லை.ஆனால் தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு பலவீனமாக்கப்படுகின்றது . பொதுமக்கள் அச்சநிலையில் வாழ்கிறார்கள். யார், யாரை வேண்டுமானாலும் படுகொலை செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது..

2025ஆம் ஆண்டு 111 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரையான 47 நாட்களில் 9 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். சட்டத்தரணி புத்திக மல்லவராச்சியை படுகொலை செய்தவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. ஆனால் இந்த சட்டத்தரணியின் சேவை பெறுநர்கள் மற்றும் பாதாள குழுக்கள் தொடர்பு பற்றி பொலிஸார் பொறுப்பற்ற வகையில் கருத்துக்களை வெளியிடுகின்றனர்

இந்த வன்முறைகளின் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாக மக்கள் சந்தேகிப்பதாகக் குறிப்பிட்ட சாகர காரியவசம், கறுப்பு அங்கி அணிந்த சட்டத்தரணிகள் மற்றும் மகா சங்கத்தினர் மீது எவ்விதத் தயக்கமுமின்றித் தாக்குதல் நடத்தப்படும் என அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் அண்மையில் விடுத்த எச்சரிக்கையைச் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நிலையில் விரைவில் அரசாங்கத்தின் முறைகேடுகள் மற்றும் குறைகளை வெளியிடும் ஊடகவியலாளர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம். விமர்சனங்கள் மற்றும் குறைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இந்த அரசாங்கத்துக்கு கிடையாது.நாட்டின் தேசிய பாதுகாப்பை ஒருபுறம் பலவீனபடுத்தும் அரசாங்கம் மறுபுறம் புத்தசாசனத்துக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றது இது முற்றிலும் தவறு.

தேர்தல்கள் மூலம் மீண்டும் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்துகொண்டுள்ள தற்போதைய திசைகாட்டி அரசாங்கம், பாதாள உலகக் குழுக்களின் உதவியுடன் நாட்டை ஆளவும் அதிகாரத்தைத் தக்கவைக்கவும் முயற்சிப்பதாகத் தெரிவித்த அவர், இந்த நாட்டைப் பாதாள உலகக் கூடாரமாக மாற்ற எவருக்கும் இடமளிக்க முடியாது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *