பேச்சுவார்த்தை ராஜதந்திரத்தில் டிரம்ப்பின் சாணக்கியம் வெற்றி பெறுமா?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(நிகழ் காலத்தில் மிகவும் பதற்றமும் கொந்தளிப்பும் கொண்ட இரு பிராந்திய தேசங்களின் தலைவர்களுடன் டிரம்ப் அரசின் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றது என்று அவர் பறைசாற்றி உள்ளார். ஈரான் மற்றும் கொலம்பிய அதிபர்களுடன் அமெரிக்கா
பேச்சுவார்த்தை ராஜதந்திரத்தில் டிரம்ப்பின் சாணக்கியம் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே)
போர் மேகம் சூழ்ந்துள்ள வளைகுடா பகுதியில் போரை தவிர்க்க பல நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெறும் கடும் பதற்றத்தை தணிக்க, ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஈரான் – அமெரிக்கா பேச்சு வெற்றியா?
இந்த பேச்சுவார்த்தையில் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழு பங்கேற்றது. அதேபோல அமெரிக்காவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்றது. கடந்த ஆண்டு இறுதியில் ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு கடும் போராட்டம் வெடித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தமையால் ஆறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக அங்கு பதற்றமான போர் சூழ்நிலை நிலவியது. இதனை தவிர்க்க அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ஈரான் முன்வந்தது.
ஆனாலும் ஈரான் அரசை மிரட்டும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்டால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டிரம்ப் எச்சரிக்கை மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு ஏற்றவகையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரான் நோக்கி நகரத்தொடங்கின. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
போர் பதற்றத்தை தணிக்கும் வகையில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முதலில் துருக்கி சென்றார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தை தணிக்க துருக்கி அதிபர் முயற்சி மேற்கொண்டு வந்தார். மேலும், அவர் மத்தியஸ்தரராக செயல்படவும் விருப்பம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அமெரிக்கா உடன் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஈரான் அதிபர் பெசாஸ்கியன் வலியுறுத்தினார். ஆனால், பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுமா என்று அமெரிக்கா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும் ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதால் பதற்ற நிலை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் அமெரிக்க மத்தியஸ்தில் ஓமான்:
கடந்த ஆண்டு 2025 ஜூன் மாதம், ஈரான் மீது இஸ்ரேல் 12 நாட்கள் போர் நடத்தியது. அப்போது அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் அணுசக்தி திறன் மற்றும் வான் பாதுகாப்புகள் கடுமையாக சேதமடைந்தன. அதேபோல ஈரானில் கடந்த மாதம் நடைபெற்ற மிகப்பெரிய மக்கள் போராட்டங்கள் மற்றும் அதனை அரசு ஒடுக்கிய விதம் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பலவீனப்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரானை நோக்கி சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களை அனுப்பி உள்ளதோடு, ஈரானிட் நேரம் முடிந்து கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த சூழலில்தான் போர் ஏற்படுவதை தவிர்க்கவே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டும் பணியை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். ஏற்கனவே செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாட்டிற்கு அனுப்பி விட வேண்டும். அதற்கு பதிலாக பொருளாதார தடைகளை
அமெரிக்கா நீக்கி கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதை ஈரான் ஒப்புக் கொள்ளுமா அல்லது எதிர்க்குமா என்பதே தற்போதைய கேள்வியாக இருக்கிறது. ஒமான் பேச்சுவார்த்தையில் சில முடிவுகள் எட்டப்பட வாய்ப்பு இருந்தன. சர்வதேச அளவில் இந்த பேச்சுவார்த்தை மீது பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
கொலம்பிய அதிபருடன் பேச்சு:
அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்ற கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை நேரில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அதிரடியாகத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா சிறைப்பிடித்தது. போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா அதிபரின் வழக்கு விசாரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்குள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோவின் மீது குற்றம்சாட்டிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அடிக்கடி மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளால், அதிபர் பெட்ரோ, அவரது குடும்பத்தினர் மற்றும் கொலம்பியாவின் அரசு அதிகாரிகளின் மீது தடை விதிப்பதாக டிரம்ப்பின் நிர்வாகம் கடந்த 2025 அக்டோபரில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், அரசு முறைப் பயணமாக பிப்ரவரி மூன்றாம் நாள் அமெரிக்காவுக்குச் சென்றார்.
கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ சந்தித்தது குறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், வெனிசுவேலா தாக்குதலுக்குப் பிறகு அதிபர் குஸ்தாவோ பெட்ரோ மிகவும் நல்லவராக நடந்து கொள்கிறார் எனக் கிண்டலடித்து கூறியுள்ளார். இடதுசாரி கொள்கைகளுடைய அதிபர் குஸ்தாவோ காஸா, வெனிசுவேலா விவகாரங்களில், அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் அனைத்தையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்தச் சூழலில், அமெரிக்கா மற்றும் கொலம்பியா அதிபர்கள் இடையிலான சந்திப்பு சர்வதேச அளவில் தற்போது கவனம் பெற்றுள்ளது.
நேருக்கு நேர் சந்திப்பு:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கொலம்பியாவின் இடதுசாரி ஜனாதிபதி கஸ்டாவோ பெட்ரோ ஆகியோரின் முதல் நேருக்கு நேர் சந்திப்பு எதிர்பாராத விதமாக மிகவும் சுமுகமாக நடந்து முடிந்துள்ளமை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இரு தலைவர்களும் நீண்டகாலமாக ஒருவரையொருவர் கடுமையாக கடுமையாக விமர்சித்து வந்தனர். அத்தோடு இருவரும் முற்றிலும் மாறுபட்ட அரசியல் கொள்கைகளைக் கொண்டவர்கள்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக டிரம்ப் அரசு கொலம்பியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வந்ததாலும் இச்சந்திப்பு பெரும் பதற்றத்தை நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் பகைகளை மறந்து கைகுலுக்கிய டிரம்ப் – பெட்ரோ
சுமார் இரண்டு மணிநேர உரையாடல் மிகவும் நேர்மறையாக அமைந்தது. சந்திப்பிற்குப் பிறகு கருத்துத் தெரிவித்த டிரம்ப், பெட்ரோ ஒரு அற்புதமான மனிதர் என்றும், தங்களுக்குள் ஒரு நல்ல சந்திப்பு நடந்ததாகவும் புகழாரம் சூட்டினார். இது சில வாரங்களுக்கு முன்பு அவரை கொடூரமானவர் என விமர்சித்ததற்கு நேர்மாறாக அமைந்தது.
இந்தச் சந்திப்பின் போது, டிரம்ப் தனது புகழ்பெற்ற ‘The Art of the Deal’ புத்தகத்தில் “நீங்கள் ஒரு சிறந்தவர்” (You are great) என குறிப்பிட்டு பெட்ரோவுக்கு பரிசாக வழங்கினார்.இதற்குப் பதிலாக, பெட்ரோ தனது நாட்டின் பாரம்பரிய ‘வூனான்’ (Wounaan) கைவினைப் பையை டுரம்ப்புக்கும், கைகளால் நெய்யப்பட்ட ஆடையை மெலனியா டிரம்ப்புக்கும் பரிசாக வழங்கினார்.
இந்த சந்திப்பின் போது போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான போர் மற்றும் வெனிசுவேலாவின் அரசியல் நிலைத்தன்மை குறித்து விவாதிக்கப்பட்டது. அதோடு கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் கொக்கேய்ன் போதைப்பொருளைக் கட்டுப்படுத்த பெட்ரோ அரசாங்கம் இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தினார்.

அண்மையில் அமெரிக்காவினால் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, வெனிசுவேலாவின் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்துவதில் கொலம்பியாவின் பங்கு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதிபர் பெட்ரோ தனது நாட்டின் ‘மேக் த அமெரிக்காஸ் கிரேட் அகெய்ன்’ (Make the Americas Great Again) என்ற கருத்தியலை முன்வைத்தார். அதேவேளை எவ்வித பெரிய ஆரவாரங்களும் இன்றி தனிப்பட்ட முறையில் நடந்த இச்சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான விரிசலைச் சரிசெய்யும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
![]()