தங்கள் குடும்பங்களுக்கு என்ன நடந்தது என்று கண்டுபிடிக்க முடியாத பெண்கள் வடக்கில் அதிகம்

நாட்டில் ஏற்பட்ட போர் முடிந்து நீண்ட வருடங்களாகியும் மக்களின் உள்ளங்களில் இன்னும் அமைதி இல்லை-தங்கள் குடும்பங்களுக்கு என்ன ஆனது என்று கண்டுபிடிக்க முடியாத பெண்கள் இன்னும் இருக்கிறார்கள் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மன்னார், அடம்பன் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மன்னார் மாவட்ட மகளிர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் பேசுகையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மாற்றியமைக்க எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை.ஆரம்பிக்கப்பட்டுள்ள மாற்றத்தை முன்னெடுத்துச் செல்ல பெண்களும் முன்வர வேண்டும் .
எங்கள் அரசாங்கம் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது .புள்ளிவிவரங்களின்படி, மக்கள் தொகையில் சுமார் 52வீதம் பெண்கள்.அதாவது நம் நாட்டில் பெண்கள் ஒரு சக்திவாய்ந்த மக்கள் கூட்டம். ஆனால், பல்வேறு துறைகள் என்று வரும்போது, வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள் என்று வரும்போது, நடைமுறையில் இந்த சக்தி நம்மிடம் இருக்கிறதா என்பதுதான் பிரச்சினை.
நம் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்று போர், வன்முறை, நாங்கள் ஒருவரை ஒருவர் நம்பாமல் இருந்தோம். உண்மையில் யுத்தம் காரணமாக நாம் பிளவுபட்ட நாடாக மாறினோம். இதனால், பெண்கள் அதிகளவில் பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
நாட்டின் பெரும்பான்மையான பெண்கள் தாய், தந்தை, மகன், மகள், சகோதர, சகோதரிகள் இல்லாமல் தவிப்பதை நாம் அறிவோம். அப்படிப் பாதிக்கப்படும் பெண்கள் வடக்கில் அதிகம் இருப்பதை நாம் அறிவோம்.
போர் முடிந்து நீண்ட நாட்களாகி விட்டாலும் உள்ளங்களில் இன்னும் அமைதி இல்லை. தங்கள் குடும்பங்களுக்கு என்ன ஆனது என்று கண்டுபிடிக்க முடியாத பெண்கள் இன்னும் இருக்கிறார்கள். தனியாக குடும்பத்தை நடத்த உழைக்கும் பெண்கள் ஏராளம்.
இனவாதத்திற்கு எதிராக எமது அரசாங்கம் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இந்த நாட்டில் உள்ள அனைவரும் பாதுகாப்பாகவும் சம உரிமையுடன் வாழ விரும்புவதை நாம் அறிவோம்.ஆனால் இனவாத முகாம்கள் ஒன்றுக்கொன்று முரண்பாட்டை உருவாக்க முயற்சிக்கின்றன. ஊழலை ஒழித்து அவர்களுக்கான ஜனநாயகத்தை பாதுகாக்கவும், சட்டத்தை சமமாக பயன்படுத்தவும் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அதிகாரம். இது சாமானியர்களுக்கு அல்ல, அவர்களுக்கு மட்டுமே.
இந்த நாட்டின் வளங்களை எவ்வளவு அழித்தார்கள் என்பதை நாம் அறிவோம். 2022 இல், நாடு ஒரு பெரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டது. ஆனால், 2025 ஆம் ஆண்டுக்குள் திருட்டு, ஊழல், வீண் விரயம் ஆகியவற்றை தடுத்து, பொருளாதாரத்தை வலுப்படுத்த நமது அரசால் முடிந்தது.அதன் காரணமாகவே, டித்வா புயலின் போது யாருக்கும் கடன்படாமல் மக்களுக்கு உதவ முடிந்தது என்றார்.
![]()