முச்சந்தி

பங்களாதேஷில் தேசிய கட்சி வெற்றி!… இந்திய உறவில் மாற்றம் வருமா ?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் தாரிக் ரஹ்மானின் பங்களாதேஷ் தேசியவாத கட்சி (BNP) பெரும்பான்மையைப் பெற்று அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியும் வேண்டாம், பிண்டியும் (பாகிஸ்தான்) வேண்டாம், வங்கதேசமே முதன்மை என்றும் அவர் கூறியுள்ளார்)
பலரும் எதிர்பார்த்தபடி பங்களாதேஷ் தேர்தலில் தீவிர மத அடிப்படைவாத கட்சியான ஜமாஅத்-இ-இஸ்லாமி வெற்றியை தழுவவில்லை. இதனால் ஜமாஅத்-இ-இஸ்லாமிய கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்ட, இளம் தலைமுறையினரால் தொடங்கப்பட்ட தேசிய நாரிக் கட்சியும் (NCP) பாரியளவில் பின்தள்ளப்பட்டுள்ளது.
வங்கதேச தேசிய கட்சி முன்னிலை:
பங்களாதேஷில் நடைபெற்று முடிந்த 13வது நாடாளுமன்ற தேர்தலில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (BNP) பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கடந்து தனிப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, மொத்தமுள்ள இடங்களில் 211 தொகுதிகளில் வெற்றி பெற்று பிஎன்பி ஆட்சியை கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சியை அமைக்கத் தேவையான குறைந்தபட்ச இடங்கள் 151 என்ற நிலையில், பிஎன்பி 211 இடங்களை கைப்பற்றி வலுவான நிலையில் உள்ளது. இவர்களுக்கு அடுத்தபடியாக ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி 70 இடங்களை பிடித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக அவாமி லீக் கட்சி இல்லாமல் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.
ஷேக் ஹசீனாவின் ஆட்சி 2024இல் வீழ்த்தப்பட்ட பிறகு, இடைக்கால தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தலில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி (BNP) மற்றும் ஜமாஅத்-இ-இஸ்லாமி (Jamaat-e-Islami) ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி ஆரம்பத்தில் நிலவியது.
பங்களாதேஷில் 15 ஆண்டுகால ஷேக் ஹசீனாவின் ஆட்சியை வீழ்த்திய மாணவர் தலைமையிலான புரட்சிக்குப் பிறகு, கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதியன்று புதிய பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் களம் தற்போது பங்களாதேஷ் தேசியக் கட்சி (BNP) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான 11 கட்சிக் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையேயான இருமுனைப் போட்டியாக இருந்தது.
பங்களாதேசில் மொத்தமுள்ள 12.7 கோடி வாக்காளர்களில் சுமார் 44 சதவீதத்தினர் 18 முதல் 37 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களே தேர்தலின் தலைவிதியைத் தீர்மானிப்பார்கள் எனக் கருதப்பட்டது. இந்த தேர்தலில், மொத்தம் உள்ள 300 இடங்களுக்கு 2000க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர்.
ஷேக் ஹசீனா ஆட்சி வீழ்ச்சி:
ஹசீனா ஆட்சியில் இருந்து வெளியேறிய பின், பங்களாதேஷ் தேசியக் கட்சி தலைவர் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகால நாடுகடத்தப்பட்ட வாழ்க்கைக்குப் பிறகு நாடு திரும்பி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். இத்தேர்தலில் ஐம்பது கட்சிகள் போட்டியிட்டன. இந்தியாவுடன் தற்போதைய இடைக்கால அரசின் உறவு மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், புதிய ஆட்சி அமையவுள்ள கட்சிகளின் இந்தியா குறித்த நிலைப்பாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘எல்லாவற்றிற்கும் மேலாக வங்கதேசம்’ என்ற முழக்கத்துடன் பிஎன்பி கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் தனது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டார். இதில் அவர் மற்ற நாடுகளை எஜமானர்களாக அல்லாமல் நண்பர்களாக மட்டுமே கருதுவோம் என்று உறுதி அளித்துள்ளார். குறிப்பாக, டெல்லியும் வேண்டாம், பிண்டியும் (பாகிஸ்தான்) வேண்டாம்; வங்கதேசமே முதன்மை என்று அவர் கூறியுள்ளார். பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்றும், தங்கள் நாட்டு விவகாரத்தில் பிற தலையீடுகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் பிஎன்பி (BNP) தலைவர் தாரிக் ரஹ்மான் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
பங்களாதேஷில் இந்த பொதுத்தேர்தல் இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? என்ற கேள்விக்கு பதில் இலகுவாக இருக்க முடியாது. வழக்கமாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட ஜமாஅத்-இ-இஸ்லாமி, இந்த முறை வியக்கத்தக்க மாற்றமாக இந்தியாவுடன் நட்பு மற்றும் ஒத்துழைப்பு கொண்ட உறவை வளர்ப்போம் என்று இறுதி நேரத்தில் நம்பிக்கை தெரிவித்தது. சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இந்தியா உட்பட அண்டை நாடுகளுடன் சுமுக உறவு பேணப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஷபிகுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்துக்கள் – சிறுபான்மையின பாதுகாப்பு:
வங்கதேசத்தில் சமீபகாலமாக இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பிஎன்பி கட்சி சிறுபான்மையினரின் உயிருக்கும், சொத்துக்களுக்கும், வழிபாட்டு தலங்களுக்கும் கடுமையான சட்டப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. இருப்பினும், ஜமாஅத்-இ-இஸ்லாமி கட்சி இதுகுறித்து தெளிவான வாக்குறுதிகளை அளிக்காமல், சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக ஷேக் ஹசீனாவுடன் நெருக்கமான உறவை வைத்திருந்த இந்தியாவிற்கு, தற்போதைய அரசியல் மாற்றம் ஒரு சவாலாகவே உள்ளது. இடைக்காலத் தலைவர் யூனுஸ் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டியது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் தலைமுறை கட்சி:
ஷேக் ஹசீனாவின் ஆட்சியை வீழ்த்திய மாணவர் தலைமையிலான புரட்சியை முன்னெடுத்த இளம் தலைமுறையினரால் தொடங்கப்பட்ட தேசிய நாரிக் கட்சி (NCP), அனுபவமின்மை மற்றும் உள்கட்சிப் பூசல்கள் காரணமாக ஜமாத்-இ-இஸ்லாமியுடன் கைகோர்த்து போட்டியிட்டது.
ஆனாலும் மாணவர் தலைவர்களிடையே பெரும் பிரிவினை ஏற்படுத்தியுள்ளதுடன், தஸ்னிம் ஜாரா போன்ற முக்கிய பெண் தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறவும் காரணமாகியுள்ளது. ஜமாத் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
இந்தத் தேர்தல் பங்களாதேஷின் ஜனநாயகப் பாதையைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. ஹசீனா இல்லாத ஒரு புதிய பங்களாதேஷை உருவாக்குவதில் பழைய அரசியல் சக்திகள் வெற்றிபெறுமா அல்லது மாணவர்களின் கனவு நனவாகுமா என்பது எதிர்வரும் நாட்களில் தெரியவரும்.
ஷேக் ஹசீனாவின் சரிவு:
வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரியில் பொதுத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதை அந்நாட்டின் முக்கிய கட்சிகள் புறக்கணித்தன. இதனால், ஷேக் ஹசீனா வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்றார். ஆனால், சில மாதங்களில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த 2024ஆம் ஆண்டு, இட ஒதுக்கீடு முறையில் எழுந்த சிக்கலின் காரணமாக, அந்நாட்டில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், 1400 பொது மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், 22000 பேர் படுகாயமடைந்தனர். இந்த தொடர் போராட்டத்தின் காரணமாக அந்நாட்டின் அதிபர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து, பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, அது தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்த போராட்டம் குறித்து அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் வழக்குப் பதிவு செய்தது, இந்த வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என்று உறுதி செய்து, அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஆனாலும் தேர்தலில் போட்டியிட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு, முகமது யூனுஸ் அரசு தடை விதித்தது. இதனால், அக்கட்சியால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. இதையடுத்து, மற்றொரு முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி இடையே தான் இந்த தேர்தலில் போட்டி நிலவியது.
தேர்தல் கால வன்முறை :
பல்களாதேஷ் தேர்தல் பொதுவாக அமைதியாக நடந்ததாக அறிவிக்கப்பட்டாலும், பல்வேறு இடங்களில் ஏற்பட்ட மோதல்களில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக நோகாலி மாவட்டத்தில் உள்ள ஹாட்டியா பகுதியில் பிஎன்பி மற்றும் தேசிய குடிமக்கள் கட்சி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 31 பேர் காயமடைந்தனர்.
அத்துடன் பாதுகாப்பு பணியில் சுமார் 10 இலட்சம் ராணுவ மற்றும் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அத்துடன் நாடு முழுவதும் 60.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், 2024 எழுச்சியின் போது முன்வைக்கப்பட்ட ‘ஜூலை சார்ட்டர்’ (July Charter) எனும் அரசியல் சாசன சீர்திருத்த ஆவணத்திற்கு மக்கள் வாக்கெடுப்பில் 72.9% ஆதரவு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் தாரிக் ரஹ்மானின் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) பெரும்பான்மையைப் பெற்று அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் பங்களாதேஷ் தேர்தல் ஆணையத்தால் இன்னும் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இதேவேளை ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவர் ஷஃபிகுர் ரஹ்மான், தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், தனது கட்சி அவற்றை மதிக்கும் என்றும், அது தோல்வியடைந்தால் அது “எதிர்க்கட்சி அரசியலில்” ஈடுபடாது என்றும் கூறியுள்ளார்.
பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் 350 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 300 பேர் ஒற்றை உறுப்பினர் தொகுதிகளிலிருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். அதே நேரத்தில் கூடுதலாக 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஒரு வேட்பாளர் இறந்ததால் 299 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இதேவேளை
பிரதம மந்திரி பதவிக்கால வரம்புகள், நிர்வாக அதிகாரத்தில் வலுவான சரிபார்ப்புகள் மற்றும் பாராளுமன்ற அதிகார ஒருங்கிணைப்பைத் தடுக்கும் பிற பாதுகாப்புகள் உள்ளிட்ட அரசியல் சீர்திருத்தங்கள் குறித்தும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *