முச்சந்தி
பங்களாதேஷ் 2026 தேர்தல்… இளம் தலைமுறையின் கனவு நனவாகுமா?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

பங்களாதேஷில் 15 ஆண்டுகால ஷேக் ஹசீனாவின் ஆட்சியை வீழ்த்திய மாணவர் தலைமையிலான புரட்சிக்குப் பிறகு, பெப்ரவரி 12 ஆம் திகதியன்று புதிய பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் களம் தற்போது பங்களாதேஷ் தேசியக் கட்சி (BNP) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான 11 கட்சிக் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையேயான இருமுனைப் போட்டியாக மாறியுள்ளது.

மொத்தமுள்ள 12.7 கோடி வாக்காளர்களில் சுமார் 44 சதவீதத்தினர் 18 முதல் 37 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களே தேர்தலின் தலைவிதியைத் தீர்மானிப்பார்கள் எனக் கருதப்படுகிறது. இந்த தேர்தலில், மொத்தம் உள்ள 300 இடங்களுக்கு 2000க்கும் மேற்பட்டோர் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
ஷேக் ஹசீனா ஆட்சி வீழ்ச்சி:
இத்தேர்தலில் 50 கட்சிகள் பங்கேற்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இந்த பொதுத் தேர்தலைப் பார்வையிட அந்நாட்டு அரசு இந்தியா உட்படப் பல நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஹசீனா ஆட்சியில் இருந்து வெளியேறிய பின், பங்களாதேஷ் தேசியக் கட்சி தலைவர் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகால நாடுகடத்தப்பட்ட வாழ்க்கைக்குப் பிறகு நாடு திரும்பி தீவிரப் பிரசாரத்தில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, இடைக்கால தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைபெறும் இந்த தேர்தலில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி (BNP) மற்றும் ஜமாஅத்-இ-இஸ்லாமி (Jamaat-e-Islami) ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்தியாவுடன் தற்போதைய இடைக்கால அரசின் உறவு மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், புதிய ஆட்சி அமையவுள்ள கட்சிகளின் இந்தியா குறித்த நிலைப்பாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக வங்கதேசம் என்ற முழக்கத்துடன் பிஎன்பி கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் அவர் மற்ற நாடுகளை எஜமானர்களாக அல்லாமல் நண்பர்களாக மட்டுமே கருதுவோம் என்று உறுதி அளித்துள்ளார். குறிப்பாக, டெல்லியும் வேண்டாம், பிண்டியும் (பாகிஸ்தான்) வேண்டாம்; வங்கதேசமே முதன்மை என்று அவர் கூறியுள்ளார். பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்றும், தங்கள் நாட்டு விவகாரத்தில் பிற தலையீடுகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் பிஎன்பி (BNP) தலைவர் தாரிக் ரஹ்மான் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
பங்களாதேஷில் இந்த பொதுத்தேர்தல் இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? என்ற கேள்விக்கு பதில் இலகுவாக இருக்க முடியாது. வழக்கமாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட ஜமாஅத்-இ-இஸ்லாமி, இந்த முறை வியக்கத்தக்க மாற்றமாக இந்தியாவுடன் நட்பு மற்றும் ஒத்துழைப்பு கொண்ட உறவை வளர்ப்போம் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இந்தியா உட்பட அண்டை நாடுகளுடன் சுமுக உறவு பேணப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஷபிகுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்துக்கள் – சிறுபான்மையின பாதுகாப்பு:
வங்கதேசத்தில் சமீபகாலமாக இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பிஎன்பி கட்சி சிறுபான்மையினரின் உயிருக்கும், சொத்துக்களுக்கும், வழிபாட்டு தலங்களுக்கும் கடுமையான சட்டப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.
இருப்பினும், ஜமாஅத்-இ-இஸ்லாமி கட்சி இதுகுறித்து தெளிவான வாக்குறுதிகளை அளிக்காமல், சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படும் குறிப்பிட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக ஷேக் ஹசீனாவுடன் நெருக்கமான உறவை வைத்திருந்த இந்தியாவிற்கு, தற்போதைய அரசியல் மாற்றம் ஒரு சவாலாகவே உள்ளது. இடைக்காலத் தலைவர் யூனுஸ் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டியது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெப்ரவரி 12-ம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவின் முடிவில் 13-ம் தேதி வெளியாகும் முடிவுகள், தெற்காசியாவின் அரசியல் வரைபடத்தில் இந்தியாவின் செல்வாக்கை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இளம் தலைமுறை கட்சி:
ஷேக் ஹசீனாவின் ஆட்சியை வீழ்த்திய மாணவர் தலைமையிலான புரட்சியை முன்னெடுத்த இளம் தலைமுறையினரால் தொடங்கப்பட்ட தேசிய நாரிக் கட்சி (NCP), அனுபவமின்மை மற்றும் உள்கட்சிப் பூசல்கள் காரணமாக ஜமாத்-இ-இஸ்லாமியுடன் கைகோர்த்துள்ளது.
இந்த முடிவு மாணவர் தலைவர்களிடையே பெரும் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளதுடன், தஸ்னிம் ஜாரா போன்ற முக்கிய பெண் தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறவும் காரணமாகியுள்ளது. ஜமாத் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்தத் தேர்தல் பங்களாதேஷின் ஜனநாயகப் பாதையைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. ஹசீனா இல்லாத ஒரு புதிய பங்களாதேஷை உருவாக்குவதில் பழைய அரசியல் சக்திகள் வெற்றிபெறுமா அல்லது மாணவர்களின் கனவு நனவாகுமா என்பது பெப்ரவரி 12 அன்று தெரிந்துவிடும்.

ஷேக் ஹசீனாவின் சரிவு:
வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதை அந்நாட்டின் முக்கிய கட்சிகள் புறக்கணித்தன. இதனால், ஷேக் ஹசீனா வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்றார். ஆனால், சில மாதங்களில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த 2024ஆம் ஆண்டு, இட ஒதுக்கீடு முறையில் எழுந்த சிக்கலின் காரணமாக, அந்நாட்டில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், 1400 பொது மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், 22000 பேர் படுகாயமடைந்தனர். இந்த தொடர் போராட்டத்தின் காரணமாக அந்நாட்டின் அதிபர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். இந்த போராட்டம் குறித்து அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் வழக்குப் பதிவு செய்தது, இந்த வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என்று உறுதி செய்து, அவருக்கு மரண தண்டனை விதித்தது.
போராட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்ற நிலையில், ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதைத் தொடர்ந்து, பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, அது தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2026 பெப்ரவரி மாதம் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இது குறித்து அந்நாட்டு அதிபர் ஷஹாபுதீனுடன், தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தியிருந்தனர். ஆனாலும் தேர்தலில் போட்டியிட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு, முகமது யூனுஸ் அரசு தடை விதித்துள்ளது. இதனால், அக்கட்சியால் தேர்தலில் போட்டியிட முடியாது. இதையடுத்து, மற்றொரு முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி இடையே தான் இந்த தேர்தலில் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதில் ஆணையம் உறுதியாக உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் நஸீருதீன் தெரிவித்துள்ளார். தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதன் மூலம், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயக தேர்தல் நடைமுறையை நோக்கிய பயணத்தை வங்கதேசம் முறையாகத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சர்வதேச பார்வையாளர்கள்:
இந்த தேர்தலில், மொத்தம் உள்ள 300 இடங்களுக்கு 2000க்கும் மேற்பட்டோர் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதில் 50 கட்சிகள் பங்கேற்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பொதுத் தேர்தலைப் பார்வையிட அந்நாட்டு அரசு இந்தியா உட்படப் பல நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
வங்கதேச அரசு இந்தியாவிற்கும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்தியா தனது பார்வையாளர் குழுவை அனுப்புவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் இருந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த அழைப்பை ஏற்று இதுவரை 330 சர்வதேச பார்வையாளர்கள் வருகைதர உள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஆறு சர்வதேச அமைப்புகள் வங்கதேசத்திற்கு வருகை தர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அதே நேரத்தில், 16 நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளில் உள்ள தனிமனிதர்கள் எனப் பலரும் வருகை தர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
![]()